காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை தனக்கு தர வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள், திறம்பட செயல்பட திறமை இருக்கிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சமில்லை. அதிலும் தமிழ்நாடு காங்கிரஸில் சொல்லவே வேண்டாம். அண்மையில்கூட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் ஊடங்களில் செய்தியாக வெளியானது. இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் கோஷ்டி பூசலைக் கையாள்வது பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், தனக்கு ஒருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அளித்தால் கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்டுவேன். தனக்கு ஒருமுறை வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் சிவகங்கையில் வசிக்கிறார். அண்மையில் அவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் அவருடைய வீட்டுக்கு சென்று ராஜசேகரனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்தி சிதம்பரத்திடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார் வந்தாலும் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் சண்டை மட்டும் மாறவே இல்லையே ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் நான் அதற்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைப்பேன் என்று கூறினார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: “நான் இதை வெளிப்படையாகவே பலமுறை சொல்லியிருக்கிறேன். நம் நாட்டு அரசியலில் தனது ஆசைகளை வெளிப்படையாக சொல்வதிலே எல்லோரும் கூச்சப்படுவார்கள். அதில் எனக்கு எந்தவிதமான தயக்கமோ கூச்சமோ கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி நியமனப் பதவிதான். அந்த பதவியை எனக்கு தந்தார்கள் என்றால் திறம்பட செய்வதற்கு எனக்கு திறமையும் இருக்கிறது, ஊக்கமும் இருக்கிறது என்பதை நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். அந்த பதவி ஒரு காலத்தில் வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி வந்தால், என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு என்னுடைய செயல்திட்டத்தை நான் கண்டிப்பாக அமல்படுத்துவேன். கண்டிப்பாக மூத்த தலைவர்களை அனுசரிக்க வேண்டும். புது ரத்தத்தையும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். எனக்கு இருக்கும் எண்ணங்கள், சிந்தனைகள் இன்றைக்கு இருக்கும் நிலையோடு கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா என்று என்னால் சொல்ல முடியாது. நான் கொஞ்சம் திவிரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த உறுப்பினர் எண்ணிக்கையை நான் ஏற்றுக்கொள்வது கிடையாது. என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி என்றால், ஒரு சட்டமன்றத் தொகுதியில் தீவிரமான உறுப்பினர்கள் 100-200 பேர்தான் இருப்பார்கள். அந்த மாதிரி உறுப்பினர்களை வைத்துதான் நான் கட்சியை நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஓபன் மேம்பர்ஷிப் சிஸ்டத்தை நான் ஏற்றுக்கொள்வது கிடையாது. அந்த அளவான தீவிரமான உறுப்பினர்களுக்குள் தேர்தலை நடத்தி அவர்களுக்குள்ளே நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள்தான் வேட்பாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஆகவே, என்னுடைய எண்ணத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பதை என்னால் இன்றைக்கு சொல்ல முடியாது.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“