காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அனைவரும் சசி தரூரை ஆதரிக்க வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளால் காங்கிரஸ் கட்சி வட்டாரம் களை கட்டியுள்ளது.
தலைவர் பதவிக்கு இருமுனை போட்டி நிலவுகிறது. சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் களம் இறங்காத நிலையில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஜி23 தலைவர்களில் ஒருவரான சசி தரூர் களம் இறங்கியுள்ளார்.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், இருவரும் ஆதரவு தேடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் தமிழகம் வந்து தங்களுக்கான ஆதரவைத் திரட்டினர். மல்லிகார்ஜூன கார்கே ஆதரவு திரட்டிய கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துக் கொண்ட நிலையில், சசி தரூர் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில், சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். மேலும் அனைவரும் சசி தரூரை ஆதரிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூன்று பேரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை.
போட்டியிடும் வேட்பாளர்களிடையே ஆரோக்கியமான போட்டி நடந்து, வாக்களிக்க தகுதி உடையவர்கள் தங்கள் மனசாட்சிப்படி, வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம்.
சோனியா காந்தி அவர்கள் ஏதோ ஒரு வேட்பாளரை மட்டும் விரும்புகிறார்கள் என்று தவறாக சிலர் பரப்பி வருகிறார்கள்.
அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
வாக்களிக்க தகுதி உடைய அத்தனை காங்கிரஸ் நண்பர்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.
நான் சசி தரூர் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் சசி தரூர் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil