SC Verdict on Karur Stampede Updates: கரூர் வழக்கு: சி.பி.ஐ விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயிக்கவில்லை - ஜோதிமணி எம்.பி

Supreme Court Verdict on TVK Rally updates: கரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிகிறது.

Supreme Court Verdict on TVK Rally updates: கரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karur MP Jothimani

Supreme Court verdict on TVK Vijay Rally Updates: கரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையை உலுக்கியது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார். 

Advertisment

விசாரணை முடிவில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர் யஷ் எஸ்.விஜய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். 

இதனை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிப தி கள் ஜே.கே.மகேஸ் வரி, என் . வி.அஞ் சரியா ஆகியோர் அடங் கிய அமர் வு தீர்ப்புக்காக ஒத்தி வைத்தனர். இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கவும், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழு அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Oct 13, 2025 22:06 IST

    கரூர் வழக்கு: விசாரணையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை - ஜோதிமணி எம்.பி

    காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், சி.பி.ஐ விசாரணையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. இதனால், சி.பி.ஐ விசாரணை 1 ஆண்டு, 2 ஆண்டுகள் வரை நடக்க வாய்ப்பு உள்ளது.  அதனால், காலக்கெடு நிர்ணயிக்க வாதிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.



  • Oct 13, 2025 21:29 IST

    விஜய் கண்டிப்பாக கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பார் - த.வெ.க நிர்வாகி அருண்ராஜ்

    த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் கூறியதாவது: “நாங்கள் பாரபட்சமற்ற விசாரணையைக் கேட்டிருந்தோம். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருந்தோம். நாங்கள் சி.பி.ஐ விசாரணை கேட்கவில்லை. மற்ற மனுதாரர்கள் சி.பி.ஐ விசாரணை கேட்டிருந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, அதை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், 2 ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். பெரிய மகிழ்ச்சி என்று  சொல்ல முடியாது. ஆனால், நாங்கள் மகிழ்ச்சி. நீதி வெல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர் கையால் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருக்கிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசினார். இந்த வாரம் விஜய் கரூர் நேரில் சென்று மக்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக, கரூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் பேசி இடம் மற்றும் நேரத்தை நாங்கள் முடிவு செய்ய இருக்கிறோம். முடிவு செய்தவுடன் விஜய் கண்டிப்பாக நேரில் சென்று அவர்களைப் பார்ப்பார்கள். நீதி வெல்லும், உண்மை வெளியில் வரவேண்டும் என்பதில் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். சி.பி.ஐ விசாரணைக்கு நாங்கள் கண்டிப்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்போம். எப்போது வரச்சொன்னாலும் நேரில் ஆஜராவோம், எங்களிடம் உள்ள சாட்சிகலை சி.பி.ஐ-யிடம் கொடுப்போம்.” என்று கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 13, 2025 20:41 IST

    உச்ச நீதிமன்றம் பல கேள்விகள் கேட்டு தமிழக அரசுத் தலையில் கொட்டு வைத்துள்ளது - நயினார் நாகேந்திரன்

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கரூர் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கூறுகையில்,  “அனுமதி கோரிய இடத்தில் காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும், ஏன் காவல்துறை மறுக்கிறது. காவல்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்; நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். உச்ச நீதிமன்றம் பல கேள்விகள் கேட்டு தமிழக அரசுக்கு தலையில் கொட்டு வைத்துள்ளது” என்று கூறினார்.



  • Oct 13, 2025 20:30 IST

    கரூர் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது ஏன்? நீதிபதிகள் கூறிய காரணம் என்ன?

    கரூர் துயரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான காரணத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கினர். இந்த வழக்கில் உள்ள 'அரசியல் உள்நோக்கம்' மற்றும் சம்பவத்தின் தீவிரத்தைக் கருதாமல், காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஊடகங்களில் தெரிவித்த கருத்துகள், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுமா என்ற சந்தேகத்தை பொதுமக்களின் மனதில் ஏற்படுத்தக்கூடும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    “பொதுமக்களின் நம்பிக்கையும், விசாரணையின் மீதான நம்பகத்தன்மையும் மிக முக்கியமானது. எனவே, காவல்துறை உயர் அதிகாரிகள் ஊடகங்களில் தெரிவித்த கருத்துகள், குடிமக்கள் மத்தியில் விசாரணை மீதான நடுநிலைமை மற்றும் நியாயமான விசாரணை குறித்த சந்தேகத்தை உருவாக்கக்கூடும்” என்ற கருத்தை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்களின் நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Oct 13, 2025 19:48 IST

    கரூர் துயரம்: தேவையெனில் மேலதிக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், முதல்கட்ட பார்வையின் அடிப்படையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அரசுத் தரப்பில் பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தேவையெனில் மேலதிக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒரு நபர் விசாரணைய ஆணையம், உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டது.



  • Oct 13, 2025 19:10 IST

    ‘நீதிக்கான முன்னெடுப்பில் முதல் படியில் இருக்கிறோம்’ - த.வெ.க நிர்வாகி ராஜ்மோகன் பதிவு

    த.வெ.க நிர்வாகி ராஜ்மோகன் எக்ஸ் தளத்தில் பதிவு, “நீதிக்கான முன்னெடுப்பில் முதல் படியில் இருக்கிறோம். கொடும் இடையூறுகளை கடந்துக் கொண்டிருக்கிறோம், இனி வரும் தடையூறுகளையும் கடப்போம்.

    சூழ்ச்சியும், எதிர்ப்பும், அவதூறும் எத்தனை வந்தாலும் அத்தனையையும் உறுதியாய் எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம். அதுவே அறம். நீதி வெல்லும்.” என்று கூறியுள்ளார்.



  • Oct 13, 2025 18:38 IST

    கரூர் விவகாரம்; மேற்பார்வைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்

    கரூர் விவகாரத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு மேற்பார்வைக்குழு, தனது முதல் கூட்டத்தை வெகு விரைவில் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது



  • Oct 13, 2025 17:50 IST

    கரூர் சம்பவம் வழக்கில் ஒருநபர் ஆணையம், எஸ்.ஐ.டி விசாரணை ரத்து - உச்ச நீதிமன்றம்

    கரூர் துயரம் குறித்த விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது



  • Oct 13, 2025 17:48 IST

    நீதி வெல்லும்: த.வெ.க தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு

    கரூர் சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில், நீதி வெல்லும் என த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்



  • Oct 13, 2025 17:36 IST

    கரூர் சம்பவம்: மாநில அரசின் மீது மிகப்பெரிய சந்தேகம் உள்ளது - வானதி ஸ்ரீனிவாசன்

    கரூர் சம்பவத்தை ஒரு விபத்தாக மட்டுமே பார்க்க முடியாது என்பதே எல்லோரின் கருத்தாக உள்ளது. பல்வேறு விஷயங்கள் மாநில அரசின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.



  • Oct 13, 2025 17:21 IST

    கரூர் விவகாரம்; தி.மு.க.,வினர் மிரட்டுவதாக வழக்கு தொடர்ந்த பிரபாகரன் வீடியோ

    கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுக்கவில்லை என தி.மு.க.,வினர் பொய்யாக கூறியுள்ளனர் என்றும், தி.மு.க ஒன்றிய செயலாளர் ரகுநாதன் தனக்கு பணம், அரசு பணி வழங்குவதாக கூறி மிரட்டுவதாகவும் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் வீடியோ வெளியிட்டுள்ளார்.



  • Oct 13, 2025 15:47 IST

    கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை -சீமானுக்கு அண்ணாமலை கேள்வி

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது, யாரு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்?, மற்ற விவகாரங்களில் முதல்வர் சிபிஐ விசாரணை கோரியபோது சீமான் கருத்து தெரிவிக்காதது ஏன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Oct 13, 2025 14:58 IST

    தி.மு.க அரசுக்கு சரியான சவுக்கடி - உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எல்.முருகன் வரவேற்பு

    கரூர் வழக்கில் தி.மு.க அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது, கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது. இதன் மூலம் உண்மை விரைவில் வெளியில் வரும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.



  • Oct 13, 2025 14:16 IST

    ''சிபிஐ விசாரணை - அரசுக்கு தோல்வி, விஜய்-க்கு டேக் டைவேர்ஷன், போலீஸுக்கு அசிங்கம்'' - சீமான் பேட்டி

    சிபிஐ விசாரணையை நாங்கள் பெரிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனை காலத்தில் சிபிஐ விசாரணை செய்து கண்டுபித்த பெரிய கேஸ் ஏதாவது இருக்கிறதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Oct 13, 2025 14:03 IST

    திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

    கரூர் வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது. கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது; இதன் மூலம் உண்மை விரைவில் வெளிவரும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 



  • Oct 13, 2025 13:30 IST

    நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையிட்டுள்ளார். 



  • Oct 13, 2025 13:23 IST

    விசாரணை சரியானது என்றுதான் அர்த்தம் - திமுக வழக்கறிஞர் வில்சன்

    உயர்நீதிமன்றம் அமைத்த எஸ் ஐ டி இதுவரை விசாரித்த விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; அப்படி என்றால் இன்றுவரை அவர்கள் நடத்திய விசாரணை சரியானது என்றுதான் அர்த்தம் என்று திமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான வில்சன் பேட்டியளித்துள்ளார். 



  • Oct 13, 2025 13:08 IST

    ஆதவ் அர்ஜுனா பேசியது நீதிமன்ற அவமதிப்பு - வழக்கறிஞர் வில்சன்

    ஆதவ் அர்ஜுனா பேசியது நீதிமன்ற அவமதிப்பு. போலியாக மனு தாக்கல் செய்தது தெரிய வந்தால் தீர்ப்பு ரத்தாகும். சிபிஐ கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரிக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்காது என்று வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். 



  • Oct 13, 2025 13:00 IST

    உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் - வானதி ஸ்ரீனிவாசன்

    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்; கரூரில் நடைபெற்ற சம்பவத்தை ஒரு விபத்தாக மட்டுமே பார்க்க முடியாது என்பதே எல்லோரின் கருத்தாக உள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் பேட்டியளித்துள்ளார். 



  • Oct 13, 2025 12:47 IST

    கரூர் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும் - வழக்கறிஞர் வில்சன் பேட்டி

    உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்புதான் என டெல்லியில் திமுக வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார். 'நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும். இன்று வரை எஸ்.ஐ.டி. நடத்திய விசாரணை சரியானதுதான் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது' என வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.



  • Oct 13, 2025 12:16 IST

    கரூர் பார்டர்ல காத்துக்கொண்டிருந்தோம் - ஆதவ் அர்ஜுனா

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் நாங்கள் எல்லோரும் கரூர் பார்டரில் காத்துக்கொண்டிருந்தோம்; காவல்துறைதான் கலவரம் வரும்.. நீங்கள் வரவேண்டாம் என்றார்கள்” என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேட்டியளித்துள்ளார். 



  • Oct 13, 2025 12:09 IST

    தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு - அ.தி.மு.க எம்.பி இன்பதுரை கருத்து

    "நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது; இது தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு; இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்" என்று கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை கருத்து தெரிவித்துள்ளார். 



  • Oct 13, 2025 11:46 IST

    கரூர் வழக்கு - யார் இந்த அஜய் ரஸ்தோகி?

    கரூர் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2018-ல் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார். இவர் ஜல்லிக்கட்டு தீர்ப்பு அமர்வில் இடம் பெற்றவர் ஆவார்.



  • Oct 13, 2025 11:41 IST

    கரூர் வழக்கு - ஆதவ் அர்ஜுனா கருத்து

    கரூர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவம் நடந்த அன்று நானும் சில நிர்வாகிகளும் கரூர் எல்லையிலேயே காத்திருந்தோம். காவல்துறையினர்தான் எங்களை அங்கு வரவேண்டாம், வந்தால் கலவரம் வந்துவிடும் என்று தெரிவித்ததாக கூறினார்.



  • Oct 13, 2025 11:33 IST

    கரூர் வழக்கு - சி.பி.ஐ மாதந்தோறும் அறிக்கை தர உத்தரவு

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையிலான குழு முன்பு சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Oct 13, 2025 11:29 IST

    சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது சிறப்பான உத்தரவு அல்ல - மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து

    கரூர் நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது சிறப்பான உத்தரவு அல்ல. உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குழு கண்காணிக்கும் என்பதெல்லாம் சற்று மிகையாக உள்ளது. வழக்கு விசாரணையை இன்னும் தொடங்காத நிலையில் பாரபட்சம் என்பதற்கு இடமில்லை என்று மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Oct 13, 2025 11:21 IST

    நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை- உச்ச நீதிமன்றம் கருத்து

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தவிட்டது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதை கருதுவதாகவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Oct 13, 2025 11:11 IST

    கரூர் வழக்கு - உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கரூர் துயரம் தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.



  • Oct 13, 2025 10:55 IST

    சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதி - சுப்ரீம் கோர்ட் நீதிபதி (ஓய்வு) குழு கண்காணிக்க உத்தரவு

    கரூரில் த.வெ.க பரப்புரையின் போது கூட்ட நெரிசலி சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை குழுவில் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.



  • Oct 13, 2025 10:44 IST

    விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை- உயர்நீதிமன்ற நீதிபதி கருத்தை நீக்க த.வெ.க கோரிக்கை

    கரூர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது த.வெ.க தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த கருத்தை நீக்க த.வெ.க கோரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 13, 2025 10:37 IST

    கரூர் விவகாரம் - அ.தி.மு.க.வி-னர் போலி கையெழுத்து பெற்று வழக்கு

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அ.தி.மு.க-வினர் போலி கையெழுத்து பெற்று வழக்கு தொடர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



  • Oct 13, 2025 10:18 IST

    கரூர் வழக்கில் புதிய திருப்பம்-தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு

    கரூர் வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குடும்பத்தைப் பிரிந்துச் சென்ற தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர் செல்வன் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா என்பவரும், தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.



  • Oct 13, 2025 10:13 IST

    சி.பி.ஐ விசாரணை கோரிய மனுக்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - த.வெ.க விளக்கம்


    சி.பி.ஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என த.வெ.க சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விசாரிக்க கோரியே மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். 



  • Oct 13, 2025 10:05 IST

    சற்று நேரத்தில் தீர்ப்பு!

    கரூர் துயர விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை எதிர்த்தும், சிபிஐ விசாரணை கோரியும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.



  • Oct 13, 2025 09:49 IST

    விஜய் தாமதமாக வந்ததே காரணம் - தமிழக அரசு

    தமிழக அரசு தரப்பில் நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்றும், அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணைத் தேவை என்றும், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரவுடிகள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இரவில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் எந்தத் தவறும் இல்லை என்று வாதம் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், உடற்கூராய்வுக்கு எத்தனை மேசைகள் இருந்தன, மருத்துவக் கட்டமைப்பு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்து தீர்ப்பை இன்று ஒத்திவைத்தனர். இந்தசூழலில் வழக்குமீதான தீர்ப்பு இன்று வரவிருக்கிறது.



  • Oct 13, 2025 09:48 IST

    இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதிமன்றம்

    கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி தவெக மட்டுமில்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்திலிருந்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. சிபிஐ விசாரணைக் கோரிய 5 மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பில், காவல் துறையின் அறிவுறுத்தலின்படியே நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார் என வாதிடப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பில், பரப்புரையில் ரவுடிகள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ போன்ற பொதுவான ஒரு அமைப்பு விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



  • Oct 13, 2025 09:43 IST

    கரூர் கூட்ட நெரிசல் - மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு

    கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பான மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது. உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடைகோரி தவெக மனு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு உத்தரவிட உள்ளது.



  • Oct 13, 2025 09:40 IST

    த.வெ.க நிர்வாகி ஜாமின் மனு - இன்று விசாரணை

    கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைதான த.வெ.க மேற்கு மாவட்ட செயலாளர்  மதியழகனின் ஜாமின் மனு மீது கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்க உள்ளது. 



  • Oct 13, 2025 09:24 IST

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

    சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க வழக்கறிஞர் ஜி.எஸ்.மணியும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பிலும், விஜய் தரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  இன்று  பிறப்பிகிறது.



  • Oct 13, 2025 08:51 IST

    கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு - சிறப்பு புலனாய்வுக் குழு

    கரூர் சம்பவத்தையடுத்து அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் யஷ் எஸ்.விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில்  ரிட் மனு தாக்கல் செய்தனர்.

     



  • Oct 13, 2025 08:49 IST

    கரூர் தவெக பரப்புரை முதல் 41 பேர் உயிரிழப்பு வரை

    கரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியது. தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய - மாநில அரசுகள் மற்றும் த.வெ.க கட்சி சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 



  • Oct 13, 2025 08:49 IST

    கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்

    கரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம்  இன்று உத்தரவு பிறப்பிகிறது.



Karur TVK Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: