முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில், அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திமுகவினர் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து, அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்த நிலையில் இறுதியில் நீதிமன்றம் சென்று, மெரினாவில் இடம் கிடைத்தது. அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ் அன்றாடம் அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றுடன் அவர் மறைந்து 100 நாட்கள் ஆகிறது. இதையடுத்து அவரது சமாதி இன்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அவரது தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்!
80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமூக தளங்களில் திமுகவினர் அல்லாது பொதுமக்கள் பலரும் கருணாந்தி குறித்து அதிகளவில் ட்வீட் செய்து, அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பலரும் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.