திமுக சட்டமன்றம் செல்வது குறித்து சனிக்கிழமை முடிவு: #கலைஞர்95 விழாவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

kalaignar95 LIVE UPDATES கருணாநிதியின் 95வது பிறந்தநாள் கொண்டாட்டத்தால் விழாக்கோலம் பூண்டது திருவாரூர்! திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டிருக்கிறார்கள்.

kalaignar95 LIVE UPDATES: கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் விழா நடக்கிறது. கருணாநிதி 95-வது பிறந்தநாள் விழா நிகழ்வுகள் இங்கு தரப்படுகிறது.

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா ஜூன் 3-ம் தேதி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் பிரமாண்டமாக கொண்டாடுவது திமுக.வின் வழக்கம். இந்த ஆண்டு கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் கொண்டாட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்தார்.

கருணாநிதியின் உடல்நிலை காரணமாக அவரால் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மாநிலம் முழுவதும் இருந்து இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். காலையில் தெம்மாங்கு வாழ்த்தரங்குடன் தொடங்கிய நிகழ்ச்சியை தொண்டர்களுடன் முன் வரிசையில் அமர்ந்து ஸ்டாலின் பார்த்தார்.

kalaignar95 LIVE UPDATES: கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் விழா நடக்கிறது. கருணாநிதி 95-வது பிறந்தநாள் விழா நிகழ்வுகள் இங்கு தரப்படுகிறது.

10:20 PM: ‘நாங்கள் மீண்டும் சட்டமன்றக் கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என இங்கு தலைவர்கள் வலியுறுத்தினார்கள். விரைவில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரவிருக்கிறது. அது வரும்போது நம்பிக்கை வாக்கெடுப்பை எடப்பாடி அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி எங்களை வெளியே அனுப்பிவிட்டு வாக்கெடுப்பு நடத்த விரும்புவார்கள். அதனால்தான் எங்களை பெருந்தன்மையாக அழைப்பது போல அழைக்கிறார்கள்.

ஆனாலும் நீங்கள் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். நான் கலைஞரின் மகன். அனைவரிடமும் கலந்து பேசி இது குறித்து நீங்கள் திருப்திபடும் அளவில் முடிவு எடுப்பேன். நாளை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். அதில் இது குறித்து முடிவு எடுப்போம்’ என்றார் ஸ்டாலின்.

10.15 PM: ‘அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றார் தலைவர். நாங்கள் உங்களிடம் கடன் கேட்கிறோம். உங்களின் சக்தியில் பாதியைத் தாருங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிற ஆட்சியை அகற்றியாக வேண்டும்’- ஸ்டாலின்

10:10 PM: ஆறாவது முறையாக கலைஞர் முதல்வர் ஆகியிருந்தால், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டிருக்குமா, இல்லையா? கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தால் பேசி தண்ணீர் வாங்கினாரா இல்லையா கலைஞர்?’-ஸ்டாலின்
‘மோடியின் கால் சென்னையில் படாமல் விரட்டி அடித்தவர்கள் நாங்கள்’- ஸ்டாலின்

10:05 PM: ‘இந்த மண்ணில் இருந்துதான் நாங்கள் வீரத்தை பெற்றிருக்கிறோம். உலகம் சுற்றும் மோடியை சென்னையில் கால் படாமல் விரட்டி அடித்தவர்கள் நாங்கள். அந்த வீரத்தை உங்களிடம் பெற்றிருக்கிறோம்’-ஸ்டாலின்

10:00PM: இந்தியா இதுவரை தந்திராத மாபெரும் தலைவர் கலைஞர்-ஸ்டாலின்

9:55 PM: இரவு 9.55 மணிக்கு மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.

9:55 PM: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ‘நாளை முதல் நீங்கள் சட்டமன்றம் செல்லவேண்டும் என்பதை தாய்க்கழகம் என்ற முறையில் கூறுகிறோம். உங்களை தூக்கிப் போட்டாலும் கவலைப் படாதீர்கள். வெளியே தூக்கி எறியப்பட வேண்டியவர்கள் உள்ளே இருக்கும்போது நீங்கள் ஏன் வெளியே இருக்க வேண்டும். எனவே உரிமையுடன் கூறுகிறோம். நாளை கூடி முடிவெடுங்கள்’ என்றார்.

9:50 PM: தலைவர்கள் பலரும் பேச வேண்டியிருந்ததால், மு.க.ஸ்டாலின் பேச இரவு 10 மணியை தொட வேண்டியிருந்தது.

9:30 PM: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.

9:10 PM: துரைமுருகன் பேசுகையில், ‘தலைவரால் பேச முடியவில்லை. ஆனால் ஏடுகள் எல்லாம் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. நல்ல நினைவுடன் அவர் இருக்கிறார்’ என்றார்.

9:00 PM: காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், கருணாநிதியின் நகைச்சுவை உணர்வு கலந்த நிகழ்வுகளை பட்டியலிட்டுப் பேசினார். இறுதியாக, ‘நான் மாநிலம் முழுவதும் பலருடனும் பேசுகிறேன். பெரும்பான்மை இல்லாத 111 பேருடன் எடப்பாடி அரசு நடக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீங்களும் பங்கேற்க வேண்டும். நாம் உள்ளே போகாவிட்டால், அவர்கள் மக்களுக்கு விரோதமான எதையும் தீர்மானமாக நிறைவேற்ற முடியும்.

தறிகெட்டு ஓடுகிற குதிரையை அடக்கும் திறமை வாய்ந்த நீங்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை எனக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கூறிக்கொள்கிறேன்’ என்றார் திருநாவுக்கரசர்.

8:30 PM: ‘நாடாளுமன்றத் தேர்தல் முடிகிற நிலையில் இந்திய அரசியலை தீர்மானிக்கிற இடத்தில் தென்னகத்தின் பிரதிநிதி தலைவராக செயல் தலைவர் தளபதி இருப்பார்’ என்றார் வைகோ.  ‘புதிதாக பலர் வரலாம். பத்திரிகைகள் எட்டுக்கால செய்தி போடலாம். ஆனால் முதல்வராக ஸ்டாலினுடன் போட்டி போடும் தகுதி யாருக்கும் இல்லை’ என்றார் வைகோ.

8:15 PM: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழைய நினைவுகள் பலவற்றை எடுத்து, உணர்வுபூர்வமாக பேசி வருகிறார்.

8:00 PM: ‘காவி இல்லாத இந்தியா, சாதி இல்லாத தமிழகம் என்கிற நிலையை அடைய தளபதி தலைமையில் பணியாற்றுவோம்’ என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

7:45 PM: ‘தளபதியை முதல்வராக அமர வைப்போம் என அண்ணன் வைகோ கூறியிருப்பது உங்களுக்கு அங்கீகாரம்! அதை விடுதலை சிறுத்தைகள் அங்கீகரிக்கிறது’ என்றார் திருமா.

Karunanidhi 95th Birthday, Thiruvarur

kalaignar95 LIVE UPDATES: கலைஞர் 95, திருவாரூர் விழாவில் கூட்டம்

7:30 PM: பேராசிரியர் ஜவாஹிருல்லாவைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசினார். ‘அகில இந்திய அளவில் தலைவர்களை ஒருங்கிணைக்ககூடிய தலைவராக அண்ணன் தளபதி மிளிர்ந்து வருகிறார். அண்ணன் முத்தரசன் சொன்னதைப் போல இந்த அணி அவசிய தேவையாக இருக்கிறது. வெறும் தேர்தலுக்கான அணியாக இல்லாமல், மதவாதத்திற்கு எதிராக மாநில சுயாட்சிக்கான அணியாக அமையவேண்டிய வரலாற்றுத் தேவை இருக்கிறது’ என்றார் திருமாவளவன்.

7:00PM: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசுகையில், ‘கலைஞரது பணிகளுக்காக அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு உடனே வழங்கி தனக்கு பெருமை தேடிக்கொள்ள வேண்டும்’ என்றார்.

6:55 PM: ‘இங்கு இருக்கும் தோழமைக் கட்சிகள் சார்பில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சட்டமன்றத்திற்கு தளபதி செல்ல வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும். நமது போராட்ட அணி, அரசியல் அணியாக மாற வேண்டும். வகுப்பு வாதத்தை முறியடிக்கிற அணியாக இது அமையவேண்டும். இந்த அணிக்கும் தளபதி தலைமை தாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார் முத்தரசன்.

6:50PM: தொடர்ந்த முத்தரசன், ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என அதிமுக, பாஜக, ரஜினி என மூன்று குரல்கள் ஒரே மாதிரி ஒலிக்கிறது. அப்படியானால் ரஜினியின் குரல் யாருடையது? மற்றவர்களின் குரலாக ரஜினி ஒலிக்க வேண்டாம். திரைப்படத் துறையில் உங்கள் புகழை தக்க வைத்துக் கொள்ளுங்கள்!’ என்றார்.

6:45 PM: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், ‘கலைஞர் முதல்வராக இருந்த 1989-1990 காலகட்டத்தில் அவரை அப்பாய்ன்மென்ட் இல்லாமலேயே சென்று விவசாயிகள் பிரச்னைக்காக சந்தித்தோம். விவசாய தொழிலாளர்கள் மாநாட்டுக்கு நாங்கள் அழைத்தபோது, அந்த மாநாட்டில் என்ன கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டு விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தை அமைத்துவிட்டு வந்த தலைவர் அவர். காலில் விழுந்து வணங்கத்தக்க தலைவர் அவர்’ என்றார்.

6:30PM: கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், ‘அடுத்த ஆண்டும் இங்கு கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட வேண்டும். அப்போது எதிர்க்கட்சித்தலைவரின் முன்னிலையில் அல்ல, முதல் அமைச்சரின் முன்னிலையில் விழா நடைபெற வேண்டும்’ என்றார்.

6:00 PM: வாழ்த்தரங்கம் தொடங்கியது. பேராயர் எஸ்றா.சற்குணம் பேசுகையில், ‘ஆட்சியில் இல்லாத 13 ஆண்டுகளும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவாலயத்திற்கு அழைத்து என்னிடம் பேசிக் கொண்டிருப்பார் கலைஞர். அவரை வாழ்த்திப் பேச வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி’ என்றவர், மறைமுகமாக ரஜினியை சீண்டினார்.

5:15 PM : வாழ்த்தரங்கிற்கு திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் முன்னிலையில் கி.வீரமணி, திருநாவுக்கரசர், வைகோ, காதர் மொய்தீன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.


5:00 PM : மாலை 5 மணிக்கு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் வாழ்த்தரங்கம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் வாழ்த்தரங்கம் சற்றே தாமதமாக தொடங்கும்.

4:45 PM : காலையில் நடைபெற்ற திரையிசைக் கலைஞர்களின் தெம்மாங்கு இசையரங்கத்தை கழக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார்.

4:30 PM : கருணாநிதியின் 95வது பிறந்தநாள் கொண்டாட்டத்தால் விழாக்கோலம் பூண்டது திருவாரூர்! மாநிலம் முழுவதும் இருந்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டிருக்கிறார்கள்.

 

 

×Close
×Close