கருணாநிதியின் சொந்த ஊரில் இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வர இருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள், ஜூன் 3-ம் தேதி! இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் விழா எடுப்பதுடன், மாவட்டம் தோறும் பொதுக்கூட்டங்களையும் நடத்துவது வழக்கம்! இந்த ஆண்டு வித்தியாசமாக ஜூன் 1-ம் தேதி கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் விழா எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின்!
கருணாநிதி கடைசியாக இரு சட்டமன்றத் தேர்தல்களில் தனது சொந்த ஊரான திருவாரூரில்தான் போட்டியிட்டார். அதேபோல செண்டிமெண்டாக பிறந்தநாள் விழாவையும் செண்டிமெண்டாக சொந்த ஊரில் கொண்டாடுவதாக தெரிகிறது. இந்த விழா குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
‘என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நம் உயிரனைய தலைவரின் 95வது பிறந்த நாள் விழா கொண்டாட்ட மடல். அவருடைய உடல் அசைவுகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின்றி எதுவும் அசைவதில்லை. இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர்.
சமூகநீதி அடிப்படையில் அனைத்து சமுதாய மக்களும் கல்விவேலைவாய்ப்பு உரிமையைப் பெறுவதற்காக பொது நுழைவுத் தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்து, பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரும் டாக்டராகவும் என்ஜினீயராகவும் பரிமளிக்க வழி செய்தவர் கலைஞர்.
இன்று இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரு மதம், ஒரு மொழி, ஒரே கலாச்சாரம், ஒரு கட்சி-ஆட்சி என்கிற சர்வாதிகாரப் போக்கு மேலோங்குவதையும், அதற்காக ஜனநாயகத்தின் விழுமியங்களைப் புறக்கணித்து மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்க நினைப்போரையும் நாடு எதிர்கொண்டிருக்கிறது.
இந்த நிலை மாறவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டு ஜனநாயகத்தை மீட்கவும், ஓரணியில் நிற்கவேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது தலைவர் கலைஞரின் பேராற்றல்.
தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வர் அதிகமான திட்டங்களை தமிழ்நாட்டுக்குத் தந்து இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தலைவர் என்ற பெருமை கொண்ட தலைவர் கலைஞர் அவர்களின் 95-வது பிறந்த நாள் என்பது, காலண்டரில் கிழித்தெறியும் சாதாரண நாள் அல்ல.
காலம் தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாதனைச் சரித்திர நாள். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் 95 வயது தலைவருக்கு, பொதுவாழ்வு வயது 81, திரையுலக வயது 71, கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து அரை நூற்றாண்டு, 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் அவரை அச்சாணியாகக் கொண்டே சுழல்கிறது.
ஜூன் 3-ல் தொடங்கி மாதம் முழுவதும் தமிழகம் எங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் 95-வது பிறந்த நாளை எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். அதற்கு கட்டியங்கூறும் வகையில் கழகத்துடன் இணைந்து மக்கள் நலனுக்காகக் களம் காணும் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும், தலைவர் கலைஞர் வளர்ந்த அவரை வார்த்தெடுத்த தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தலைவரை வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதியில் ஜூன் 1 அன்று, அண்ணா திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக் கூட்டத்தில் வாழ்த்துரை ஆற்றுகின்றனர்.
நீண்ட நெடுங்காலமாக தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் அவரது அரசியல் தோழரான கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தலைமையேற்க, தலைவரின் சொந்த மண்ணாகிய திருவாரூரில் அவரது மைந்தன் என்ற பெருமையுடனும் அவரது இயக்க உடன்பிறப்பு என்ற தகுதியுடனும் நானும் பங்கேற்கிறேன்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.