சென்னையில் கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சியில் அமித்ஷாவுடன் பங்கேற்கும் தேசிய தலைவர்களின் பட்டியல் வெளியானது.
திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக திருச்சியில் பத்திரிகையாளர்களும், மதுரையில் இலக்கியவாதிகளும் பங்கேற்ற இரங்கல் கூட்டங்கள் நடந்தன. கோவையில் கலையுலகினரும், திருநெல்வேலியில் தமிழக அரசியல் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்திருக்கிறது.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஆகஸ்ட் 30-ம் தேதி, ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. திமுக ஏற்பாட்டில் அன்று மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்றுப் பேசுகிறார். இதில் தேசியத் தலைவர்கள் பங்கேற்று ‘கலைஞருக்கு புகழ் வணக்கம்’ செய்கிறார்கள்.
சென்னையில் கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சியில் தேசிய தலைவர்கள்
இதற்கான அழைப்பிதழ் வெளியாகியிருக்கிறது. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் பெயர் அதில் முதலிடத்தில் உள்ளது. திமுக மேடையில் பாஜக தேசியத் தலைவர் பங்கேற்பது மிக அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமித்ஷா கலந்து கொள்வதால், இதில் இடதுசாரிகள் பங்கேற்பார்களா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் அவர்களும் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அமித்ஷாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இதர தேசிய தலைவர்கள் பட்டியல் வருமாறு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆஸாத், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ஆகியோர் பேசுகிறார்கள்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.