கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் 5 இடங்களில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டங்களை திமுக நடத்துகிறது. முதல் கூட்டம் வருகிற 17-ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் ஊடக வல்லுனர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
2-வது கூட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. முத்தமிழ் வித்தகர் கலைஞர் என்ற தலைப்பில் இலக்கிய ஆளுமைகள் அதில் பேசுகிறார்கள். ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 4 மணிக்கு கோவை இந்துஸ்தான் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில், ‘மறக்க முடியுமா கலைஞரை?’ என்ற தலைப்பில் கலைத்துறையினர் பேசுகிறார்கள்.
‘கலைஞர் புகழுக்கு வணக்கம்’ என்கிற தலைப்பில் கூட்டம் நடைபெறும் இடங்கள்!
ஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி திடலில், ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். நிறைவாக ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பேசுகிறார்கள்.
திமுக தலைமைக்கழகம் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறது.