Karunanidhi Death News: அண்ணாவின் இதயத்தை கேட்டுப் பெற்ற கருணாநிதிக்கு அண்ணா சமாதியில் இடம் கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்பதுதான் திமுக தொண்டர்களின் கோரிக்கை!
அண்ணா மறைந்த போது கருணாநிதி வாசித்த இரங்கல் அறிக்கை மிக பிரசித்தமானது. கவிதை வடிவிலான அந்த இரங்கல் அறிக்கையின் ஒரு பகுதி இப்படி இருக்கிறது.
‘கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத்
தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா...
நான் வரும் போது கையோடு
கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா’
கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7) மறைந்ததும், திமுக தொண்டர்களுக்கு எழுந்த சந்தேகம், அதிமுக அரசு அண்ணா சமாதியில் கருணாநிதிக்கு இடம் கொடுக்குமா? என்பதுதான்! மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வைத்த கோரிக்கை இதுதான்!
எம்.ஜி.ஆர். சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதுபோல, அண்ணா சமாதிக்கு பின்புறமாக கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது வாதம்! ஆனால் கருணாநிதி தற்போது முதல்வராக இல்லாதது, தவிர அண்ணா நினைவிடம் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரும் மரியாதை செலுத்துகிற இடம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஆளும் தரப்பு தயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
கருணாநிதி மறைவுக்கு பிறகு துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்ட வேண்டுகோள் கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வழங்கினர். அப்போதும் முதல்வர் தரப்பில், ‘பார்ப்போம்’ என்கிற பதில் மட்டுமே கிடைத்திருக்கிறது.
எனினும் ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்த தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. அண்ணா சமாதியிலும் இடம் கொடுக்குமா? என்பது பல்வேறு தரப்பு எதிர்பார்ப்பு! ஆனால் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில், ‘கிண்டியில் காந்தி மண்டபம் அருகே கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார். திமுக தரப்புக்கு இது பேரதிர்ச்சி!
பல்வேறு தரப்பு கோரிக்கையை ஏற்று காலைக்குள் முடிவை தமிழக அரசு மாற்றுமா? என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.