அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் சென்னை முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மீது தமிழக அரசின் சார்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 13 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தமிழக அரசு மீதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மீது அவதூறான கருத்துகளை முரசொலியில் கட்டுரையாக வெளியிடப்பட்டது, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தது உள்ளிட்ட பல்வேறு செய்திகளின் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் குமரேசன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணையின் போது திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி, இது குறித்து அரசின் உரிய உத்தரவை (அரசு திரும்ப பெறுவதாக அரசாணை தாக்கல் செய்ய வேண்டும்) அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கு விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.