கருணாநிதி இறுதி அஞ்சலி: தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் குடும்பத்தினர் அஞ்சலிக்காக கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அதன்பின், சிஐடி காலனி வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்ட கருணாநிதி உடல், அதிகாலை 04.30 மணியளவில் இருந்து, பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
ராஜாஜி ஹாலில் உடல் வைக்கப்பட்ட உடனேயே, ரஜினிகாந்த் குடும்பத்துடன் வந்து கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதியின் பூத உடலுக்கு ரஜினிகாந்தின் இறுதி அஞ்சலி
பின்னர் கமல்ஹாசன், அஜித், சிவாகர்த்திகேயன் உள்ளிட்ட எண்ணற்ற திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மூத்த அமைச்சர்கள் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, ராஜாஜி ஹாலுக்கு வந்து கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், போலீஸ் கட்டுப்பாட்டை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு தொண்டர்கள் திடீரென கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். எனினும் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண் போலீசார் உட்பட 33 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு என்ற தகவலும் கிடைத்துள்ளது. எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம்(60), மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல் இதுவரை தமிழக அரசால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், கலைஞர் உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இருந்த கூட்டம் கலைக்கப்பட்டு சீரானது. முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பாதையும் சரி செய்யப்பட்டு காவல்துறையினர் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.