கருணாநிதி உடல்நிலை வதந்தியை நம்ப வேண்டாம் என மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். கருணாநிதிக்கு சாதாரண காய்ச்சல் என்றும் விளக்கம் அளித்தார்.
கருணாநிதி, தமிழ்நாடு அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மையப் புள்ளியாக இயங்கி வருபவர்! 95 வயதான திமுக தலைவர் கருணாநிதி, தொண்டையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.
கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவேரி மருத்துவமனையில் மாற்றியமைத்தனர். அதன்பிறகு வீடு திரும்பினார். இந்தச் சூழலில் நேற்று (ஜூலை 24) மாலை முதல் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வதந்திகள் கிளம்பின.
கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமடைந்துவிட்டதாகவும், டாக்டர்கள் கைவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்தச் சூழலில் இன்று (ஜூலை 25) சென்னையில் கோபாலபுரம் இல்லத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘கலைஞரின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மருத்துவமனையில் குழாய் மாற்றிய பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. எனவே பயப்படக்கூடிய வகையிலோ அதிர்ச்சி அடையக்கூடிய வகையிலோ ஒன்றும் இல்லை’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.