கலைஞர் கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
Advertisment
முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்ரமணியன், சேகர்பாபு மற்றும் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன், எம்எல்ஏ உதயநிதிஸ்டாலின் ஆகியோரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதற்காக கலைஞர் நினைவிடம் முழுவதும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், நினைவிடத்தில், " தமிழ் சமுதாய வளர்ச்சிகான் இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம் " என்ற உறுதிமொழி வாசகம் முதலமைச்சர் கையொப்பமுடன் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின் கலைஞரின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஸ்டாலின் வருகையையொட்டி பீச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அண்ணா சதுக்க பேருந்து நிலையத்திற்கு செல்ல பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. அங்கு திமுக பிரமுகர்களின் வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தன. நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஸ்டாலின் சென்ற பிறகு போக்குவரத்தை சரி செய்ய வெகுநேரம் ஆனதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil