முன்னாள் தமிழக முதல்வர், தி.மு.க தலைவர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளையொட்டி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நேற்று (ஜுன் 7) புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, முத்தரசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜுன் 3-ம் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற இருந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று விழா நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கருணாநிதியின் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு ஜுன் 3-ம் தேதி வரை கொண்டாடப்படும். கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை கருணாநிதியின் கால் படாத இடம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, "நூற்றாண்டு விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஜுன், ஜூலை மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா, மதுரையில் நூலகம், திருவாரூரில் கலைஞர் தோட்டம் ஆகியவைகள் திறக்கப்பட உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7-ம் தேதி திறக்கப்படும்" என அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil