டிச.16ல் திறக்கப்படும் கருணாநிதி உருவச் சிலை: தேசியத் தலைவர்களை மீண்டும் அணி திரட்டும் ஸ்டாலின்

இதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஸ்டாலின் நேரில் சந்திக்கிறார்

மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவச் சிலை வரும் டிசம்பர் 16 -ம் தேதி திறக்கப்படும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் மாதம் 16 -ம் தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள்.

ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்து தமிழகத்தில் மட்டுமின்றி -உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்படவுள்ளது.

புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் – கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16 ஆம் தேதி தலைவர் தலைவரின் உருவச் சிலை திறப்பு விழா, எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில் தேசிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஸ்டாலின் நேரில் சந்திக்கிறார்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நவம்பர் 22ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இதில் கலந்து கொள்ளும் மு.க.ஸ்டாலின், அப்படியே தேசியத் தலைவர்களை சிலைத் திறப்பு விழாவிற்கு அழைக்க உள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நடந்த கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்திற்கு தேசியத் தலைவர்களை சென்னையில் ஒன்று திரட்டிய ஸ்டாலின், தற்போது மீண்டும் அவர்களை சிலை திறப்பு விழாவிற்கு அணி திரட்ட உள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close