அண்ணாவிடம் இரவல் வாங்கிய இதயத்தை திருப்பி அளித்த கருணாநிதி!

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்: இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

By: August 8, 2018, 7:12:59 PM

‘அண்ணா! உன் இதயத்தை எனக்கு இரவலாக கொடு! நான் அங்கு வரும்போது, உன்னிடம் திரும்பித் தருகிறேன்’ என்று பேரறிஞர் அண்ணா இறந்த போது இரங்கற்பா வாசித்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது, அந்த தம்பி, அண்ணன் துயில் கொள்ளும் இடத்தில் நிரந்தரமாக ஓய்வெடுக்க வந்து, இதயத்தை திருப்பியளித்துள்ளார்.

‘‘பத்துச் சிலை வைத்ததினால் – அண்ணன் தமிழின்பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.

ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!

எம் அண்ணா… இதயமன்னா…
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்?

உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா?

நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற்கரையில் உறங்குதியோ?…
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?

விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்..

இன்று, மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

கடற்கரையில் காற்று

வாங்கியது போதுமண்ணா

எழுந்து வா எம் அண்ணா

வரமாட்டாய்; வரமாட்டாய்,

இயற்கையின் சதி எமக்குத் தெரியும் – அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..

நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’’

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Karunanidhi poem on anna demise

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X