பேராசிரியர் அன்பழகன் கையில் முத்தம் கொடுத்த கருணாநிதி! நெகிழ்ச்சியான புகைப்படம்

பேராசிரியரைப் பார்த்ததும் பரவசமடைந்த கருணாநிதி அவரது கையைப் பிடித்து முத்தம் கொடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதியை, கட்சியின் பொது செயலாளரும் அவருடைய நீண்ட கால நண்பருமான பேராசிரியர் க.அன்பழகன் இன்று சந்தித்தார். அப்போது பேராசிரியரின் கையில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை கருணாநிதி வெளிப்படித்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவ்வப்போது கட்சி நிர்வாகிகள் சந்தித்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் தனது பேர குழந்தையுடன் விளையாடுவது போன்ற வீடியோ வெளியானது. இன்னொரு கட்சி நிர்வாகியின் குழந்தையிடம் நான் யார் என்று கேட்பது போன்ற வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரும், கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகன், அவரை பார்க்க கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவரான பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி திமுக தலைவரானதில் இருந்தே, அவருடன் இருக்கிறார். கருணாநிதியின் வீட்டு திருமணம் மற்றும் சுப காரியங்கள் அனைத்தும் பேராசிரியர் தலைமையில்தான் நடக்கும்.

பேராசிரியரைப் பார்த்ததும் பரவசமடைந்த கருணாநிதி அவரது கையைப் பிடித்து முத்தம் கொடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதை பார்த்ததும் பேராசிரியர் அன்பழகன் நெகிழ்ந்து போனார். அவருடன் சிறிது நேரம் பேசி, உடல் நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்.

×Close
×Close