மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. கருணாநிதியின் மூத்த மனைவி பத்மாவதி தம்பதியருக்கு பிறந்த மு.க.முத்து தமிழ் சினிமாவில் நடிகராக இருந்தவர். பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 1970-களில் கதாநாயகனாக நடித்திருந்தார். சமையல்காரன் போன்ற இவரது படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தந்தையின் கலை ஆர்வத்தைப் போல, மு.க.முத்துவும் நாடகங்களிலும், பின்னர் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 70களில், திமுக மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரபலமானார். எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக கருணாநிதியால் திரைத்துறைக்குள் கொண்டுவரப்பட்டவர் மு.க.முத்து. அவர் நடித்த திரைப்படங்களில், பிள்ளையோ பிள்ளை (1972), பூக்காரி (1973), சமையல் காரன் (1974), அணையா விளக்கு (1975) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவர் சில பாடல்களையும் பாடியுள்ளார். அவரது நடிப்பு மற்றும் தோற்றம் எம்.ஜி.ஆரைப் போலவே இருந்ததாக அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது.
இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து சென்னையில் தங்கியிருந்தார். இதனிடையே உடல்நலக்குறைவால் இன்று மு.க.முத்து காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மு.க. முத்துவின் வாழ்க்கை கலை, அரசியல், தனிப்பட்ட சவால்கள் எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. அவரது மறைவு திமுக தொண்டர்களிடையே மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.