தஞ்சாவூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திரையரங்கால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கருணாநிதி அரங்கத்தை மாற்றி அமைத்ததாக அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
கியூப் சினிமாஸ் மற்றும் வெற்றி - இ - ஸ்கொயர் ஆகியவை இணைந்து எபிக் பிரீமியம் என்ற வடிவத்திலான திரைகளை தஞ்சாவூரில் அமைத்துள்ளனர். இதன் முதல் திரை 65 அடி அகலமும் 34 அடி உயரமும், இரண்டாவது திரை 61 அடி அகலமும் 32 அடி உயரமும் கொண்டது.
குறிப்பாக, இரண்டு எபிக் வகை திரைகளைக் கொண்ட இந்தியாவின் முதல் நகரம் என்ற பெருமையை தஞ்சை பெற்றுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் விதமாக இந்த திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த திரையரங்கால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதன்படி, கருணாநிதி அரங்கத்தை திரையரங்காக மாற்றியதற்கு அரசியல் கட்சியினர் இடையே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் சுமார் ரூ. 62 கோடி மதிப்பீட்டில் கான்ஃபரன்ஸ் ஹால் கட்டட்டப்பது. இதற்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கம்’ என்று பெயரிடப்பட்டு, திருமண விழா, அரசியல் நிகழ்வுகள் நடத்துவதற்கு இதனை வாடகைக்கு விடப்படுவதாக முன்னர் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தான், கருணாநிதி அரங்கத்தை சினிமா திரையரங்கமாக மாற்றியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதனை திறக்காமல் கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த வெற்றி சினிமாஸ் உரிமையாளரான வெற்றிவேல் என்பவருக்கு திரையரங்கம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், திரையரங்கை விரைவில் திறக்கவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்காக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட அரசு கட்டடத்தை, தி.மு.க ஆட்சியிலேயே திரையரங்காக நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால், இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து அ.ம.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரன் கூறுகையில், "பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கருணாநிதி அரங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த அரங்கத்தில் நடைபெற்ற ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பின்னர் தனி நபர்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கேட்டும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை.
ஆனால், கருணாநிதி அரங்கத்தில் தியேட்டர் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். அதற்கான பணிகள் முடிந்து தியேட்டர் திறக்கப்பட இருந்த நிலையில், கிளம்பிய பலத்த எதிர்ப்பால் கிடப்பில் போட்டனர். அந்த சமயத்தில் தியேட்டர் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என மாநகராட்சியில் தெரிவித்தனர்.
எனினும், வெற்றி - இ - ஸ்கொயர் நிறுவனம் விரைவில் தியேட்டரை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். அந்த வளாகத்தில் மூன்று திரைகள் அமைத்துள்ளனர். இதற்காக ஏற்கனவே கட்டிய கட்டடத்தை இடித்து விட்டு புதுப்பித்துள்ளனர். இதில் பல கோடி பணம் விரயமாகியிருக்கிறது.
கருணாநிதி பெயரில் உள்ளதை அவர்களது ஆட்சியில் தனியாருக்கு, அதுவும் தியேட்டர் நடத்துவதற்கு தாரை வார்த்துள்ளனர். அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் தியேட்டர் நடத்தப்போகிற நிறுவனம் அதை திறக்கப் போவதாக அறிவித்துள்ளது.
மக்கள் வரிப்பணத்தில், பொதுமக்களுக்காக கட்டிய கட்டடத்தை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தியேட்டர் திறப்பதை தடுக்க வேண்டும். இல்லை என்றால் அதை கண்டித்து வரும் 27-ஆம் தேதி அ.ம.மு.க சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் பேசிய போது, "தியேட்டர் நடத்துவதற்கு ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி, ஒப்பந்தம் எடுத்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தியேட்டர் நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தியேட்டர் நடத்துவதற்கு எந்த அனுமதியும் தரவில்லை" என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.