திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் பசுமை விகடன் சார்பில் அக்ரி எக்ஸ்போ-2023 எனும் வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஏப்.28) தொடங்கி 30ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
இந்தக் வேளாண் கண்காட்சியை திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ் கலந்து கொண்டு பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மரபு வழி விவசாயம் பின்பற்றப்படுகின்றது.
ஆனால், மரபு வழி விவசாயத்தை முதன் முதலில் பின்பற்றிய தமிழ்நாட்டில் அது முழுமையாக பின்பற்றப்படவில்லை. இந்திய அளவில் கர்நாடகா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளே பாரம்பரிய விவசாயத்தை முன்னிலைப்படுத்துகிறது.
“நான் விவசாயியாக மாறியது, ஒரு ஆக்சிடென்ட், என் அம்மா, அப்பா எதையும் எனக்காக சேர்த்து வைக்கவில்லை. எனக்கு அதில் வருத்தமும் இல்லை. ஆனால் என்னை இந்த ஆரோக்கியத்துடன் பெற்றதற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
மரபு வழி விவசாயத்தையே நமது நாடும், தமிழகமும் முழுவதுமாக பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும். இந்த மரபு சார்ந்த பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். அதனை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
தற்போது உள்ள காலத்தில் தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஒருபுறம் மது விற்பனை செய்தாலும், அதை வாங்கி குடிப்பதற்காவது அவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஆதலால் தமிழக அரசு மரபு சார்ந்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.
நமது மாநில அரசு மது என்னும் நஞ்சை தாராளமாக கொடுக்கும்போது, நஞ்சில்லா உணவையும் தாராளமாக வழங்க முன்வர வேண்டும். சட்டமன்றத்தில் விவசாயத்திற்கு என பட்ஜெட் போடப்படுகிறது. வெளியே விவசாய நிலத்தில் லே-அவுட் போடப்படுகிறது.
இதனை மக்கள் தான் சிந்திக்க வேண்டும். திட்டம் போடுகிற அதிகாரிகளும் அதனை கட்டுப்படுத்துகிற அமைச்சர்களும் அவர்களை வழிநடத்தக்கூடிய முதலமைச்சரும்தான் யோசிக்க வேண்டும். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அவர்களுக்கு தெரியும். நான் சொன்னால் அதில் மாற்றம் வரப் போகிறதா? அல்லது குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யப் போகிறார்களா?
மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு நான் வைக்கிற கோரிக்கை ஒன்றுதான், இயற்கை விவசாயத்தை அமெரிக்கா போன்ற மேற்கிந்திய நாடுகள் முன்னெடுக்கும் இந்த தருணத்தில் நம் நாட்டிலும், தமிழ்நாட்டிலும், இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், அவர் பேசுகையில்; 15 வருடங்களுக்கு முன்னால், நான் கொடைக்கானலுக்கு போகும் போது, அந்த நிலம் அங்குள்ள பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று, வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மண்ணில் நீ இருந்தால் தான்…. நீ மண்ணின் மைந்தன். இந்தியாவிலேயே கேரளா என்ற ஒரே ஒரு மாநிலம் தான், இயற்கையை விட்டுக் கொடுக்காமல் உள்ளது. அதற்கு அந்த மாநிலத்தின் ஆட்சியாளர்கள் தான் காரணம்.
தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி கொடுக்கிறார்கள். கேட்டால், ஊட்டசத்து குறைபாடு காரணமாக இதை கொடுக்கிறோம் என்கிறார்கள்.
அதில் பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 5 சதவீதம் பேர். இவர்களுக்காக 8 கோடி பேருக்கும் எதற்கு இந்த அரிசியை கொடுக்கிறீர்கள்? இனிமேல் இந்த அரசை நம்பி பயனில்லை.
இந்த அரசு இனி உங்களை காப்பாத்தாது. உங்களை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நம்மாழ்வார் வர வேண்டும்.
அதை பசுமை விகடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” என்று தெரிவித்தார். இன்றைய அமர்வில் ச.அறிவழகன், ஆர்.பாலமுருகன், சதீஷ், ஷோபனாகுமார், மைசூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீனிவாஸாச்சார்யா, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“