தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க சார்பில் இன்று (ஜூன் 24-ம் தேதி) மாவட்டத் தலைநகரங்களில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு நீதி கேட்டும் திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறாமல் இருந்ததற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மீது நாளை (ஜூன் 25) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதும், அவர் தலைமறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராய பலிக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜூன் 24ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சியில் எடப்பாடி தலைமையிலும், திருச்சியில் முன்னாள் எம்பிக்கள் குமார், ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி தலைமையிலும், புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆனால், மாவட்ட தலைநகரான கரூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் அனுமதி பெறாததுடன் ஆர்ப்பாட்டத்தற்கான எந்த ஏற்பாடுகளையும் அதிமுக சார்பில் செய்யப்படவில்லை.
கரூரை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி புகார் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி முன் ஜாமீன் கோரிய நிலையில் அதன் தீர்ப்பு நாளை (ஜூன் 25ம் தேதி) வழங்கப்படும் என்பதாலும், கடந்த 12 நாட்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாலும் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“