/indian-express-tamil/media/media_files/584dtijBOrEV3wZkGLBn.jpeg)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையானதைக் கொண்டாடும் வகையில், கரூர் அருகே தொழிலதிபர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்து கவனம் ஈர்த்துள்ளார்.
கரூர் மாவட்டம், செம்படாபாளையத்தைச் சேர்ந்தவர் தோகை முருகன். தொழிலதிபதிரான இவர் தி.மு.க அனுதாபி. முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஜாமீனில் விடுதலையானதைக் கொண்டாடும் வகையில் இன்று, செம்படாபாளையத்தில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதையொட்டி, இன்று காலை முதல் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. இரவு வரைக்கும் நீடிக்கவிருக்கும் இந்த பிரியாணி மேளாவில் 5,000 பேருக்கு பிரியாணி படைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். பிரியாணி விருந்து நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியின் பதாகைக்கு புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், தோகை முருகன் ஆகியோர் பாலாபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு பிரியாணி, பாட்டில் தண்ணீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் செந்தில் பாலாஜியின் படத்தை கைகளில் ஏந்தி வாழ்த்து கோஷமிட்டனர்.
750 கிலோ அரிசி, 1,500 கிலோ கோழிக்கறி, 5,000 முட்டைகள் என பிரியாணி தயாரிக்கப்பட்டது. 10,000 பாட்டில் தண்ணீர் வழங்கப்பட்டன. காலை சுமார் 9 மணிக்கே பிரியாணி விருந்து தொடங்கிவிட்டது.
முன்னதாக கொரோனா தொற்று காலத்தில் தோகை முருகன் தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி வழங்கி கவுரவப்படுத்தினார். மக்களவைத் தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அன்னதானமாக தொடர்ந்து ஒரு மாதம் பொதுமக்களுக்கு கலவை சாதம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.