/indian-express-tamil/media/media_files/2025/10/30/karur-2025-10-30-19-31-07.jpeg)
Karur stampede CBI investigation
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக, சிபிஐ அதிகாரிகள் 11 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கரூர் வந்துள்ளனர். இந்தக் குழுவினர் விசாரணையை மீண்டும் தொடங்கியதால், கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சம்பவம் என்ன?
கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களின் பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர், மேலும் 110 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்ட ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை ரத்து செய்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது.
சிபிஐ குழுவின் முதல் வருகை
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் கடந்த 15-ஆம் தேதி கரூர் வந்தனர்.
அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி, விசாரணையைத் தொடங்கினர். அப்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக் குழுவினர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலைக் குறிப்புகளை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தவெக நிர்வாகிகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு
தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் கடந்த 18-ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பட் முன்னிலையில் முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்தனர்.
அந்த எஃப்.ஐ.ஆரில், கரூர் மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
அத்துடன், கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், இந்த எஃப்.ஐ.ஆர் நகலை தவெக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக் கொண்டனர்.
மீண்டும் கரூர் வந்த சிபிஐ குழு
நீதிமன்றத்தில் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சிபிஐ அதிகாரிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். கரூர் காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் 3 பேர் அடங்கிய துணை அதிகாரிகள் மட்டும் கரூரில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், சொந்த ஊருக்குச் சென்ற ஏழு பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மீண்டும் இன்று கரூர் வந்துள்ளனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்குத் திரும்பினர்.
அங்கு அதிகாரிகளுக்குள் ஆலோசனை நடத்திய பின்னர், சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்குவதற்காகத் தங்கள் கார்களில் புறப்பட்டுச் சென்றனர். இதனால், இந்த வழக்கு குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us