கொரோனாவால் தானும் தன் தந்தையை இழந்ததாகவும், எனவே உங்கள் சகோதரனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்று கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடம் பேசியுள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.
கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தில் தமிழக அரசு அவர்களுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த வைப்பு நிதி ரூ. 5 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது வைப்பு நிதி மற்றும் வட்டி சேர்த்து வழங்கப்படும். மேலும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து தமிழ் நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கடந்த 18ம் தேதி நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களை சேர்ந்த பெற்றோரில் ஒருவரை இழந்த 99 குழந்தைகள், ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் இருவரையும் இழந்த 2 குழந்தைகள், என மொத்தம் 65 குடும்பங்களை சேர்ந்த 101 குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர்.
இவர்களில் கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்து தவிக்கும் குழந்தைகளில் உப்பிடமங்கலத்தை சேர்ந்த தந்தையை இழந்த வி.வினோதினி (16), ப.ராஜ்குமாரவேல் (16), மற்றும் வ.நிலவரசு (15) வ.வேதவாய்பவி (8) ஆகிய 4 குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை கலெக்டர் பிரபு சங்கர் இன்று வழங்கினார்.
பின்னர் அந்த குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேசுகையில், கொரோனா தொற்றால் தந்தையை இழந்து தவிக்கும் உங்களுக்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும், கடந்து செல்ல வேண்டும். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மாதம் நானும், எனது தந்தையை இழந்துள்ளேன். இப்போது நானும் உங்களைப்போல்தான் தந்தையை இழந்தவனாக உள்ளேன். என்னை மாவட்ட ஆட்சித்தலைவராக பார்க்காமல், உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக நினைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகள் எதுவானாலும் தைரியமாக உரிமையுடன் என்னிடம் தெரிவியுங்கள். கல்வி ஒன்று மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்கும் சக்தி கொண்டது. எனவே அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். நீங்கள் கல்வி கற்கத்தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யத் தயாராக உள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் பேசினார். இதனைத் தொடர்ந்து அந்த குழந்தைகளுக்கு புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களது சகோதரனாக இருப்பதாகவும், கல்வி கற்க உதவுவதாகவும் கூறியது கரூர் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil