ஆழ்துளை கிணறு விவகாரம் தொடர்பாக, ஒருவரை, போனில் சரவண பவன் சர்வரா மாதிரி தெரியுதா உங்களுக்கெல்லாம் கலெக்டரை பார்த்தா...ராஸ்கல் என்று கரூர் கலெக்டர் பேசும்படியான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில், 2 வயதே ஆன குழந்தை சுஜித், மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். 80 மணிநேர போராட்டங்களுக்கு பிறகு, சடலமாகவே, சுஜித் மீட்கப்பட்டான். இதனையடுத்து மாநிலமெங்கும் உள்ள மூடப்படாத மற்றும் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணறுகள் குறித்த சர்வே எடுக்கப்பட்டு அவைகளை பாதுகாப்பாக மூடிவைக்க அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கரூர் தகரம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், கலெக்டர் அன்பழகனிடம் பேசும்வகையிலான ஆடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. மூடப்படாத ஆழ்துளை கிணறு குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே, தங்களை தொடர்பு கொண்டதாக அவர் கூற, அதற்கு கலெக்டர் சரவண பவன் சர்வரா மாதிரி தெரியுதா உங்களுக்கெல்லாம் கலெக்டரை பார்த்தா...ராஸ்கல் என்று பேசுவதாக அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது எனது குரல் இல்லை : கரூர் கலெக்டர் விளக்கம்
ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தியவரை திட்டியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என கரூர் கலெக்டர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல செம்பியநத்தம் இளைஞரிடம் தான் பேசவும் இல்லை என்றும் அது தனது குரலும் அல்ல என்றும் கரூர் கலெக்டர் அன்பழகன் பதில் அளித்துள்ளார்.