/tamil-ie/media/media_files/uploads/2023/05/Express-Image-16.jpg)
நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சியையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மதுரை ஆதினத்திற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி கரூர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"மதிப்பிற்குரிய மதுரை ஆதினம் அவர்கள், இந்தியாவின் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சியை நடத்திவரும் மோடியின் புகழ்பாடி, மனுநீதியை தூக்கிப்பிடிக்க விரும்பினால் தாராளமாகச் செய்யலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியையும், நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
300 ஆண்டுகளாக ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டு, சுரண்டப்பட்டு கிடந்த இந்தியாவை, அந்த ஆட்சிக்கு அடிமை செய்து, சுதந்திரப்போரட்டத்திற்கு துரோகம் செய்த பாஜக/ மோடியின் முன்னோடிகளின் சித்தாந்தத்தால் இன்றுவரை வெறுப்பு, பிரிவினை எனும் விஷவிதைகள் விதைக்கப்பட்ட மண்ணை கட்டிகாத்த இயக்கம் காங்கிரஸ் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கென்று ஒரு மதிப்புமிகுந்த இடத்தையும், வலிமையான, வளமான இந்தியாவையும் இந்திய மக்களோடு சேர்ந்து கட்டியெழுப்பிய இயக்கம் காங்கிரஸ் இயக்கம் என்பதை மதுரை ஆதினம் மறந்துவிடக்கூடாது.
சனாதன தர்மத்திற்கு எதிராக நேருவும், காங்கிரஸ் இயக்கமும் அரசியல் சாசனத்தை முன்னிறுத்தி, அந்த அரசியல் சாசனத்தின் முன் அனைவரும் சமம் எனும் சமதர்ம சமுதாயத்தைக் கனவுகண்டதாலேயே, மதுரை ஆதினம் போன்றவர்கள் ஒரு மடாதிபதியாக இன்று அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.
தமிழ் மரபில் ஆதினங்களுக்கு என்று தனித்த அடையாளமும், மரியாதையும் உண்டு. அந்த அடையாளத்திற்கு பெருமை சேர்த்த குன்றக்குடி, பேரூர் போன்ற பல ஆதினங்கள் தமிழையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். அந்த பெருமையை நரேந்திரமோடிக்கும், பாஜகவுக்கும் அடகுவைத்து தமிழ்நாட்டிற்கும், தமிழகத்தின் ஆதின மரபிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று மதுரை ஆதினம் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்", என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.