கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.
மொத்தமுள்ள 12 கவுன்சிலர்களில் அதிமுக, திமுகவுக்கு தலா 6 பேர் உள்ளனர். இதில் துணைத்தலைவர் பதவிக்கு அதிமுகவின் திருவிக, திமுகவின் தேன்மொழி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.வி.க தேர்தலை முறையாக நடத்த கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை முறையாக நடத்தவும், தேர்தல் அதிகாரி சீல் இடப்பட்ட கவரில் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் உத்தரவிடும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் ஓட்டு போடுவதற்காக அதிமுக வேட்பாளர் தி.ரு.வி.கவை, முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் காரில் அழைத்து சென்றுள்ளார்.
வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவர்களது காரை சுற்றி வளைத்தனர். மேலும் கார் கண்ணாடிகள் மீது ஆசிட் வீசி, உடைத்து, காரில் இருந்த திருவிகவை கடத்தி சென்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, தேர்தலை நிறுத்த கோரி எம்ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிமுக- திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான த.பிரபுசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர் 6 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும் பங்கேற்று வாக்களித்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை
தற்போது, அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டதால், துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்படாது. நீதிமன்றம் வழியாகவே முடிவு வரும் என்பதால் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அன்று பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, கடத்தப்பட்ட அதிமுக வேட்பாளர் திரு.வி.க. சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு, கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் மீட்கப்பட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னை கடத்தியவர்கள் தி.மு.க.வினர்தான். 7 பேர் கொண்ட கும்பல் என்னை கடத்திச் சென்றனர்.
நத்தம் காட்டுப் பகுதிக்குள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்னை சுற்றிசுற்றி கொண்டு வந்தார்கள். என்னை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி கை, கால்களில் அடித்தனர். அடிக்கடி அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு என்னை விட்டுவிட்டு ஓடி விட்டனர் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“