இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்.பி ஜோதிமணி போட்டியிடுவார் என்று கூறப்பட்டாலும், கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
கரூர் மக்களவைத் தொகுதி, திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது.
தி.மு.க கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.பி ஜோதிமணி, 695,697 வாக்குகள் பெற்று 275,151 வாக்குகள் வித்தியாசத்தில் 3 முறை கரூர் எம்.பி.யாக இருந்த அ.தி.மு.க.வின் தம்பிதுரையை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் இடையே திங்கள்கிழமை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி சார்பில், கரூர் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற ஊகம் பரவியது.
கரூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி தொடர்ந்து 2வது முறையாக வேட்பாளராக களமிறங்கிய நிலையில், இந்த முறை அவர் போட்டியிட வாய்ப்பில்லை என காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பகுதியினர் கருத்து தெரிவித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) ) உறுப்பினர் பேங்க் கே. சுப்ரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். “ராகுல் காந்தி உடனான நெருக்கத்தை காரணம் காட்டி ஜோதிமணி எந்த மூத்த தலைவர்களையும் மதிக்காததால் நான் இந்த முறை போட்டியிட சீட் கேட்கிறேன்” என்று ஜோதிமணி மீது சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே, பிப்ரவரி 12-ம் தேதி கரூரில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட விரிசல், சுப்ரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி ஜோதிமணிக்கு இந்த முறை சீட்டு வழங்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து கரூர் காங்கிரசில் ஜோதிமணி பேங்க் சுப்ரமணியன் இடையேயான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.
பேங்க் சுப்ரமணியன் கடந்த 2016-ம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஜோதிமணி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அவமரியாதை செய்ததாக விமர்சித்துள்ளார்.
கரூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி ஜோதிமணி கரூர் காங்கிரசில் தனக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எதிர்ப்பு குறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“