கரூர் அக்ஷயா : கரூர் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. அவருக்கு அக்ஷயா என்ற 12 வயது பெண் குழந்தை இருக்கிறார். அக்ஷயா அருகில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
அக்ஷயாவினை சமூக வலைதளங்களில் மக்கள் பரவலாக அறிந்து வைத்திருப்பார்கள். அக்ஷயாவிற்கு இதயக் கோளாறு இருப்பதாக கடந்த வருடம் மருத்துவர்கள் பரிசோதித்து கூறியுள்ளனர்.
முதற்கட்ட அறுவை சிகிச்சைக்காக அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி தேவைப்பட்டது. சமூக வலைதளங்களில் அந்த அறுவை சிகிச்சைக்கான நிதியை திரட்டி, அப்பல்லோ மருத்துவமனையில் முதற்கட்ட அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
வருகின்ற நவம்பர் மாதம் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார் அக்ஷயா. இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் அக்ஷயாவிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை அக்ஷயாவின் அறுவை சிகிச்சைக்காக 20,000 ரூபாய் வரை நிதி பெறப்பட்டிருக்கிறது.
கேரள வெள்ளம் நிதி உதவி
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் 14 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சீரமைப்பு மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள நிதி உதவி கேரளாவிற்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.
கரூர் அக்ஷயா அளித்த நிதி உதவி
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைப் பார்த்த அக்ஷயா தன்னுடைய அறுவை சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20,000த்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை நிதி உதவியாக கேரளாவிற்கு அளித்திருக்கிறார்.
இது பற்றி அக்ஷயாவின் அம்மா ஜோதிமணி குறிப்பிடுகையில் அத்யாவசிய தேவை காரணமாக நிதி உதவி கேட்பது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் அக்ஷயா உதவி செய்கிறேன் என்று கேட்கும் போது என்னால் மறுப்பேதும் கூற இயலவில்லை” என்று கூறினார். அக்ஷயாவின் உடல் நலம் சீர்பெறவே 2.5 லட்சம் தேவை என்கிற நிலையில் அவர் அளித்திருக்கும் நிதி உதவி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.