/tamil-ie/media/media_files/uploads/2021/10/suicide-759-1.jpg)
Kannada Actress Soujanya Suicide Note found Tamil News
பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாக இருக்கணும் என கடிதம் எழுதிவைத்துவிட்டு கரூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வராததால், பக்கத்து வீட்டில் இருந்த பெண் ஒருவர், வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக மாணவியின் அம்மாவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில், ”பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா நல்லா இருக்கும்.
பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணணும்னு ஆசை. ஆனா முடியல. ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மாமா. உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் புடிக்கும். ஆனா, நான் உங்க கிட்டலாம் சொல்லாமப் போறேன். மன்னிச்சிடுங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி” என எழுதிக் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த மரணம் குறித்து குறித்து கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரையில் இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.