கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில், "அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், என்னுடைய மனைவி, மகள் பெயர்களில் உள்ள சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அந்த சொத்துகளை எனது மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவும் செய்துக் கொண்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்" என்று பிரகாஷ் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் ஜூலை மாதம் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜ் என இருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கரூரில் இன்று திங்கள்கிழமை கைது செய்தனர். முன்னதாக, சேகர் உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழலில் தலைமறைவாக இருந்த சேகர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“