Advertisment

ஜோதிமணிக்கு எதிராக போர்க்கொடி, தீர்மானம் நிறைவேற்றம்: கரூர் காங்கிரஸில் சலசலப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது என காங்கிரஸில் ஒரு தரப்பினர் கூறி தீர்மானம் நிறைவேற்றி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Karur MP Jothimani says BJP Government is a rubber stamp of RSS
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகள் சூடு பிடித்திருக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தை, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு என திமுக வேகமெடுத்திருக்கின்றது. இந்தநிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் ஒருசிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க காங்கிரஸ் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே திருச்சியில் சிட்டிங் எம்.பி., திருநாவுக்கரசருக்கும் எதிர்ப்பு வலுத்திருக்கின்றது.

Advertisment

இதேபோல் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பியாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களை சந்தித்து, அவர்களிடம் குறைகளை கேட்டும், தொகுதி நிதியில் இருந்து பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களைச் சந்திப்பது என்று தொகுதி முழுக்க வலம் வந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில், இந்த முறை கரூர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு வழங்க கூடாது.

தி.மு.கவுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பு, தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்பட்டது. அதேநேரம், காங்கிரஸ் கட்சியினரே காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த எம்.பி.ஜோதிமணிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியதோடு, மீண்டும் அவருக்கு சீட் வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியுற வைத்திருக்கின்றனர். 

கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், 'விரைவில் தமிழகத்துக்கு வருகை தரவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது, காங்கிரஸ் கட்சி கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கட்சியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம், சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தினாலும், கூட்டணி கட்சியினரிடம் வெறுப்பு உணர்வை ஏற்படுத்திய காரணத்தினாலும், தொகுதி முழுவதும் பெரும் அதிருப்தி நிலவி வருவதால், இம்முறை ஜோதிமணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியையும், தமிழக காங்கிரஸ் கமிட்டியையும் கேட்டுக் கொள்வது என ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைபிடித்து வரும், எம்.பி ஜோதிமணியை வன்மையாக கண்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம், கரூர் தொகுதியை காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் கரூர் மாவட்ட தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான 'பேங்க்' சுப்பிரமணியனுக்கு சீட் வழங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியினை கேட்டுக்கொள்வது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர். 

கரூர் சிட்டிங் எம்.பி., ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே தீர்மானம் நிறைவேற்றிருப்பதும், இந்தமுறை கூட்டணி கட்சியினருக்கு சீட் கொடுக்காமல் திமுகவுக்கே கரூரை கொடுக்கவேண்டும் என கரூர் திமுகவினர் போர்க்கொடி தூக்கியிருப்பதும் கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

செய்தி: க.சண்முகவடிவேல்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

 

Loksabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment