/indian-express-tamil/media/media_files/2025/09/16/karur-dmk-2025-09-16-21-37-59.jpg)
கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்
தி.மு.க.வின் முப்பெரும் விழா நாளை கரூரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள கோடாங்கிப்பட்டி அருகே 50 ஏக்கர் பரப்பளவில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
முப்பெரும் விழா ஏற்பாடுகள்:
தி.மு.க. தலைமை இந்த விழாவை வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகப் பார்க்கிறது. இதற்காக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கடந்த 10 நாட்களாக நடைபெறும் பணிகளில், 200 அடி அகலம், 60 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக அமைச்சர்களான கே.என்.நேரு, முத்துசாமி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதிவாணன் ஆகியோர் நேரில் வருகை தந்தனர். அமைச்சர் கே.என்.நேரு 2-வது முறையாக விழா இடத்தை ஆய்வு செய்து, மேடை மற்றும் இருக்கை வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
விருதுகள் மற்றும் போக்குவரத்து மாற்றம்:
இந்த விழாவில், திமுக சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன:
தந்தை பெரியார் விருது: திமுக எம்.பி. கனிமொழிக்கு
அறிஞர் அண்ணா விருது: சுப. சீதாராமனுக்கு
கலைஞர் விருது: சோ.மா. ராமச்சந்திரனுக்கு
பேராசிரியர் விருது: ராமலிங்கத்துக்கு
மு.க. ஸ்டாலின் விருது: பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு
பாவேந்தர் பாரதிதாசன் விருது: அமரர் குளித்தலை சிவராமனுக்கு
முப்பெரும் விழா நடைபெறும் நாளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பயணத் திட்டம்:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், அவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு, கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்த பிறகு, மாலை 4 மணியளவில் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தர உள்ளார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, கோடாங்கிப்பட்டியில் இருந்து விழா மேடை வரை தனி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம்:
சமீபத்தில் திருச்சியில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரம்மாண்ட கூட்டத்திற்கு போட்டியாக, இந்த முப்பெரும் விழாவை திமுகவின் முதல் தேர்தல் பிரசார மேடையாக மாற்ற தலைமை முடிவெடுத்துள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை வரவழைக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "கொள்கையுள்ள கூட்டம் கரூர் முப்பெரும் விழாவில் கூடும்" என்று கூறியதால், மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு:
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் இருந்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவர் நாளை காலை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.