/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-stampede-deaths-2025-09-29-12-28-53.jpg)
karur stampede deaths
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கரூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசல் சம்பவத்தில், இதுவரை 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பதால், வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கூட்ட நெரிசல் ஒரு சாதாரண விபத்து அல்ல, இது திட்டமிட்ட சதிச்செயல். குறிப்பாக, ஆளும் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு இச்சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளது, விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்.
விஜய் இதற்கு முன் நடத்திய அனைத்து கூட்டங்களும் அமைதியான முறையில் நடந்த நிலையில், கரூரில் மட்டும் இது போன்ற ஒரு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, இதில் ஏதோ பின்னணி சதித்திட்டம் அடங்கி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை உரிய அளவில் பாதுகாப்பு வழங்கத் தவறியது, கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் தடைபெற்றது, மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தடியடி நடத்தப்பட்டது உள்ளிட்ட மனித தவறுகளும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கை மாநில அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் விசாரிப்பது ஏற்புடையதல்ல என்றும், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு மத்திய புலனாய்வுத் துறையே (சிபிஐ) அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகள் அளிக்கவும் விஜய் விரைவில் கரூர் செல்லவிருப்பதாகவும், அதற்குரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த மனு, இன்று பிற்பகலில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஒருபுறம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இரண்டாவது நாளாகத் தனது விசாரணையைத் தொடரும் நிலையில், மறுபுறம் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுடன் சிபிஐ விசாரணை கோரப்பட்டிருப்பது, கரூரின் இந்த துயரச் சம்பவத்திற்கு மேலும் ஒரு புதிய அரசியல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.