/indian-express-tamil/media/media_files/2025/10/03/karur-stampede-2025-10-03-19-10-19.jpg)
Karur Stampede
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜோதிராமன் அமர்வில் இன்று நடைபெற்றது.
வழக்கின்போது நடைபெற்ற வாதங்களில், புஸ்ஸி ஆனந்த் தரப்பு தனது பொறுப்பிலிருந்து விலகிப் பேச, நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதங்கள்:
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த முக்கிய வாதங்கள்:
"நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நான் இல்லை. மாவட்ட செயலாளர் மதியழகன்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். சொந்தக் கட்சித் தொண்டர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கரூரில் நடந்தது விபத்து. திட்டமிட்ட செயல் அல்ல. விஜய்யைப் பார்க்க வந்தவர்களைக் காவல்துறைதான் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால், காவல்துறை அனுமதி மறுத்திருக்க வேண்டும். 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்குக் கூட வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்... தாமதமாக வந்தது குற்றமா? கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்துவிட்டனர். கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்? சட்டம்-ஒழுங்கை ஒழுங்குப்படுத்துவது காவல்துறையின் கடமை.”
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளிக்கையில்:
"எந்தவித சாட்சிகளும் ஆவணங்களும் இல்லாமல் குற்றம் சுமத்துவதை ஏற்கமுடியாது. கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தை ரத்து செய்யக் காவல்துறைக்கு மதியழகன் தெரிவித்திருக்கலாம். எந்தவித அனுமதியின்றி 23 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தப்பட்டது. கூட்ட நெரிசலைத் தடுக்கக் கட்சி சார்பில் எந்த முன்னெற்பாடுகளும் செய்யப்படவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் தவெக-வினர் தப்பியோடிவிட்டனர்."
நீதிபதியின் கேள்விகள்:
வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி ஜோதிராமன், தவெக-வின் பொறுப்பு குறித்துக் கேள்வி எழுப்பினார்:
"உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நிலையை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும்போது, அதற்கான பொறுப்பு ஏற்க வேண்டும்தானே? கூட்ட நெரிசலுக்குக் காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை தேவை. தவெக பொதுச் செயலாளர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவில்லை. கூட்ட நெரிசலைத் தடுக்க எந்த அறிவிப்பும் செய்யவில்லை." என்று நீதிபதி கூறினார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு:
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றக் கிளை ஒத்திவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.