த.வெ.க. கூட்டநெரிசல் வழக்கு: கேஸ் வாபஸ் பெற ரூ.20 லட்சம் பேரம் - கரூர் பிரபாகரன் பகீர் குற்றச்சாட்டு

த.வெ.க. கூட்டநெரிசலில் தனது மகள்-மாப்பிள்ளையை இழந்த கரூர் பிரபாகரன் என்பவர், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தன்னைத் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் வாங்கினால் ரூ.20 லட்சம் பணம், வேலை வாங்கித் தருவதாகப் பேரம் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

த.வெ.க. கூட்டநெரிசலில் தனது மகள்-மாப்பிள்ளையை இழந்த கரூர் பிரபாகரன் என்பவர், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தன்னைத் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் வாங்கினால் ரூ.20 லட்சம் பணம், வேலை வாங்கித் தருவதாகப் பேரம் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
prabhakaran video

வழக்கை வாபஸ் பெற ரூ.20 லட்சம் பேரம்: கரூர் பிரபாகரன் பகீர் குற்றச்சாட்டு

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த த.வெ.க. பிரசார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதன்பின்னர் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

Advertisment

கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த சிறுவன் பிரித்திக்கின் (9) தந்தை பன்னீர்செல்வம் என்பவர், இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனு குறித்து உயிரிழந்த சிலரின் குடும்ப உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்:

பிரித்திக்கின் முன்னாள் தாய் சர்மிளா: தன் கணவர் பன்னீர்செல்வம் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டதாகவும், மகனின் இறுதி சடங்கிற்குக் கூட அவர் வரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் பணத்திற்காக சி.பி.ஐ. விசாரணை கோரியிருக்கலாம் என்றும், அவர் உச்ச நீதிமன்றம் செல்லும் அளவுக்கு விவரமானவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

சந்திராவின் கணவர் செல்வராஜ்: உயிரிழந்த மற்றொருவரான சந்திராவின் கணவர் செல்வராஜ், "வேலை நிமித்தமாக கையெழுத்துப் போடச் சொன்னதால் போட்டேன். மற்றபடி இந்த கையெழுத்தை பெற்றதே உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு மனுத் தாக்கல் செய்யதான் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

இந்த வழக்கு இன்று (அக். 13) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் கரூரில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து அவர்கள் கரூர் சட்ட உதவி மையத்தை நாடியதன் மூலம், வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கில் ஆஜராகினர்.

வழக்கை வாபஸ் பெற ரூ.20 லட்சம் பேரம் - கரூர் பிரபாகரன் பகீர் குற்றச்சாட்டு

இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசலில் தனது மகள் மற்றும் மருமகனை இழந்த கரூர் பிரபாகரன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். விஜய் பிரசாரக் கூட்டத்திற்குத் தானும், தனது மகள், மாப்பிள்ளை என 3 பேரும் சென்றதாகவும், கூட்ட நெரிசலில் சிக்கி இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, தானே முன்வந்து சிபிஐ விசாரணை வேண்டும் என வழக்கு கொடுத்ததாகவும் அவர் கூறி உள்ளார். இதனையறிந்து, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எம். ரகுநாதன் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் வாங்கினால் ரூ.20 லட்சம் பணம் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும், 'அதை செய்கிறோம், இதைச் செய்கிறோம்' என்றும் பேரம் பேசியதாகப் பிரபாகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தான் "சரி, கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" என்று சொல்லி அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

உயிருக்கு அச்சுறுத்தல்:

இன்று காலையில் தனியார் டிவி செய்திச் சேனலில், தனது பெயரைப் பயன்படுத்தி, தான் வழக்குப்போடவில்லை என்று செய்தி வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகப் பிரபாகரன் ஆதங்கப்பட்டார். "நான்தான் கேஸ் ஃபைல் பண்ணேன்; என் பேர்தான் கேஸ் போடவில்லை என்று முதலில் போடுறாங்க" என்று வேதனை தெரிவித்தார். "இதெல்லாம் பண்றவங்க வேற என்ன வேணாலும் பண்ணுவாங்க" என்றுகூறிய பிரபாகரன், தனது குடும்பத்தில் தானும் தன் தாயும் மட்டுமே இருப்பதாகவும், எனவே தங்கள் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Supreme Court Of India Dmk TVK Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: