/indian-express-tamil/media/media_files/2025/10/13/sc-karur-2025-10-13-11-56-11.jpg)
Karur stampede case: Supreme court verdict
கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் பிற மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை முக்கியமான தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
விசாரணையைக் கண்காணிக்க சிறப்புக் குழு:
நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை குடிமக்களின் அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில், தலைமை நீதிபதியுடன், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம்பெறுவார்கள். சிபிஐ தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை மாதம் தோறும் இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மீது சரமாரி கேள்விகள்:
வழக்கின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து நீதிபதி மகேஸ்வரி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தனி நீதிபதியின் எல்லை மீறல்:
"கரூர் விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வரம்புக்குள் இருக்கையில், பிரதான அமர்வில் உள்ள தனி நீதிபதி இவ்வழக்கை விசாரித்ததில் எந்த நியாயமும் இல்லை. மேலும், மனுதாரர் தரப்பில் எந்த ஆவணங்களும் இல்லாதபோதும், தனி நீதிபதி தானாகவே முன்வந்து (Suo Moto) சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க உத்தரவிட்டது, உரிய நடைமுறையை உதாசீனம் செய்கிறது. தனி நீதிபதி இந்த முடிவுக்கு எப்படி வந்தார் என்பது தீர்ப்பில் இல்லை. கரூர் பகுதி மதுரை கிளை வரம்புக்குள் இருக்கையில், தனி நீதிபதி இவ்வழக்கை விசாரித்ததற்கான காரணம் என்ன?
அரசியல் கட்சிகளுக்கான நடைமுறை விதிகளை (SoP) உருவாக்கும் விவகாரம் எப்படி கிரிமினல் வரம்புக்குள் வந்தது என்பதை சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் விளக்க வேண்டும். "இது கவலைக்குரிய விஷயம், இதற்கு உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும்," என்று கூறிய உச்ச நீதிமன்றம், அதன் தலைமை நீதிபதிக்கு இந்த உத்தரவை கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியது
மனுதாரர்கள் குறித்த சந்தேகம்:
பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சில மனுக்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது உண்மையென கண்டறியப்பட்டால், மனுதாரருக்குத் தெரியாமல் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து கூட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இறுதியில், சிபிஐ விசாரணை மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்புக் குழு ஆகியவற்றை அமைத்து, இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.