/indian-express-tamil/media/media_files/2025/09/28/vijay-arrest-stalin-2025-09-28-09-07-31.jpg)
கரூர் துயரம்: விஜய் கைது செய்யப்படுவாரா? ஸ்டாலின் பதில்
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று (செ.27) நடைபெற்ற த.வெ.க தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் பயணம்
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; "மிகுந்த துயரத்தோடும், கனத்த இதயத்தோடும் உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னால் பேச முடியவில்லை. நேற்று இரவு 7.30 மணிக்கு கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு செல்வதாக தகவல் வந்தது. உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியரை அழைத்து மருத்துவமனைக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தினேன்.
அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, அமைச்சர்களை கரூருக்கு அனுப்பி வைத்தேன். தலைமைச் செயலகத்தில் உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி கரூரில் நிலைமை குறித்து கேட்டறிந்தேன். அருகாமை மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளையும் உதவிக்கு அனுப்பி வைத்தேன். இந்த சம்பவத்தில் 39 உயிர்களை இழந்துள்ளோம். அந்த கொடூரமான காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு மனசு கேட்கவில்லை. வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் இரவு 1 மணி அளவில் புறப்பட்டு கரூர் வந்தேன்.
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. இனிமேல் இது நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன். அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார்கள்? என்று நீங்க கேட்பதற்கு எல்லாம் நான் என்னை உட்படுத்த தயாராக இல்லை என்றார். மேலும், த.வெ.க. கேட்ட இடத்தை தரவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே.?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் லின் பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.