/indian-express-tamil/media/media_files/2025/09/30/vijay-karur-court-2025-09-30-13-27-42.jpg)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெகவின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி த.வெ.க வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டுள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடிகர் விஜய் தனது பரப்புரையை மேற்கொண்டார். அவர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அறுபதுக்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விதிகளை மீறியதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின், இன்று கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், "41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்து தவெக தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். "சம்பந்தப்பட்டவர்களை ஒருநபர் ஆணைய அறிக்கை வரும் வரையில் கைது செய்யக் கூடாது. விஜய் பரப்புரைக்கு வந்த கூட்டம் தானாக வந்த கூட்டம்; யாரும் வண்டி வைத்து அழைத்து வரப்படவில்லை. விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று காவலர்களிடம் தெரிவித்தோம். நாங்கள் கட்சி நிர்வாகிகளைத் தடுக்கலாம், ஆனால் பொதுமக்களைத் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை" என்று வாதிட்டார்.
இந்நிலையில் குறிக்கிட்ட நீதிபதி பரத்குமார் தவெக தரப்பு '10,000 பேர் வருவார்கள்' என்று குறிப்பிட்டதற்கு, கடுமையான கேள்விகளை எழுப்பினார். "விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என்று எப்படி கூறினீர்கள்? சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம். உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்தோம்" என்று த.வெ.க வழக்கறிஞர்கள் பதிலளித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "உங்கள் கட்சி தலைவரை முதலமைச்சர் அல்லது மற்ற கட்சித் தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். அவர் ஒரு டாப் ஸ்டார். அப்படி இருக்கையில், 10,000 பேர் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10 ஆயிரம் என்று கணித்ததே தவறு. காலாண்டு விடுமுறை பள்ளி குழந்தைகள் எல்லாம் வருவார்கள்" என்றார். மேலும், "அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்குத் தெரியுமா? அவரிடம் இது சொல்லப்பட்டதா?" என்றும் கரூர் நீதிமன்றம் தவெக வழக்கறிஞர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. எந்த ஆவணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது; மனசாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பேன் என நீதிபதி பரத்குமார் கூறியுள்ளார்.
மேலும் "விஜய் வாகனத்தை சுற்றி பேரிகார்டு அமைக்க அனுமதி கோரினோம். விஜய் வாகனத்தை சுற்றி பேரிகார்டு அமைக்கப்படவில்லை. 4 மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்ததால் சமாளிக்க முடியவில்லை. நெருக்கடி கால வழி எதுவும் இல்லை. சென்டர் மீடியன்களை அகற்றியிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது“ என கரூர் நீதிமன்றத்தில் த.வெ.க தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் தவெக வழக்கில் ஈபிஎஸ்-ஐ உதாரணம் காட்டியும் வாதிடப்பட்டது. "முதல் நாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார். 15000 பேர் வருவார்கள் என்று சொன்னார்கள். அதேபோல 15000 பேர் வந்தார்கள் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை" என்றும் தவெக விஜய் பிரசார பலி குறித்த விசாரணையில் டிஎஸ்பி செல்வராஜ் வாதிட்டார்.
"நாங்கள் கேட்ட இடத்தில் அனுமதி வழங்கவில்லை. லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி கேட்டோம். லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் 1.20 லட்சம் சதுர அடியில் 5 பாதை உள்ளது. காவல்துறை தரப்பில் அனுமதி கொடுத்த இடத்தில் ஒரே ஒரு பாதை தான் உள்ளது" என த.வெ.க வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கு காவல்துறை தரப்பில் "தவெகவினர் அனுமதி கேட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமராவதி பாலம் உள்ளது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பாலத்தில் இருந்து பொதுமக்கள், தொண்டர்கள் கீழே குதிக்க வாய்ப்பு இருந்தது" என்று தெரிவித்தனர்.
"தவெக நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை? கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் ஏன் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை? நிர்வாகிகள் யாரும் இந்தத் தகவலை உங்கள் தலைவருக்கு (விஜய்க்கு) சொல்லவில்லையா?" என்று நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி பரத்குமார், ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்பான ஒரு வழக்கையும் மேற்கோள் காட்டி இந்தக் கேள்விகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
டி.ஐ.பி.எஸ்.ஒய். செல்வராகஜ் தனது தரப்பை விளக்கும்போது, "நடிகர் விஜய் 3 மணிக்கு வந்திருந்தால், கூட்ட நெரிசல் எதுவும் நடந்திருக்காது" என்று தெரிவித்தார். தவெக தரப்பு விளக்கமளிக்கையில், "கட்சிக்காரர்களை வேண்டுமானால் எங்களால் தடுக்க முடியும். ஆனால், அங்கு வந்திருக்கும் பொதுமக்களைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறைதான்" என்று வாதிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.