/indian-express-tamil/media/media_files/2025/10/28/vijay-stampede-2025-10-28-15-12-45.jpg)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதமான நேற்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.
நேற்று முன்தினம் கரூரில் இருந்து ஆறு சொகுசுப் பேருந்துகள் மூலம் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களில் 37 குடும்பத்தினர் மாமல்லபுரம் நட்சத்திர விடுதிக்கு வரவழைக்கப்பட்டனர். உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்தினர் மட்டும் வீட்டில் பூஜை வைத்திருப்பதாகக் கூறி வரவில்லை. போக்குவரத்துச் செலவுகளை தமிழக வெற்றிக் கழகமே ஏற்றுக்கொண்டது. நேற்று காலை 9 மணியளவில் மாமல்லபுரம் நட்சத்திர விடுதிக்கு வந்த விஜய், அங்குள்ள பிரம்மாண்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்தினார்.
இதன்பிறகு, ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனி அறைக்கு வரவழைத்து தனித்தனியாகச் சந்தித்த விஜய், தழுதழுத்த குரலில் உருக்கமாகப் பேசி ஆறுதல் கூறினார். இந்தக் குடும்பத்தினருடன் பேசும்போது, விஜய் பலமுறை கண்கலங்கி அழுததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினருடனும் சுமார் 15 முதல் 25 நிமிடங்கள் வரை அவர் பேசினார். இந்நிலையில் விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுததாக அங்கு சென்ற பெண் ஒருவர் கூறினார். கரூர் வந்தடைந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மாமல்லபுரத்தில் விஜய் தங்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகக் கூறியுள்ளனர்.
கரூர் தான்தோன்றிமலையைச் சேர்ந்த வேணி என்ற பெண்மணி, வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது இரண்டு பேத்திகள் மற்றும் மருமகளை இழந்தவர். மாமல்லபுரத்தில் விஜயைச் சந்தித்தது குறித்து அவர் பேசுகையில் உருக்கமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ‘முதலில் எங்களைப் பார்த்தவுடன் விஜய் எங்களிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு, என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் செய்து தருகிறேன். என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் என்றார்.
எங்கள் குடும்பத்திலிருந்து நாங்கள் 8 பேர் சென்றிருந்தோம். எங்கள் 8 பேர் கால்களிலும் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டார். கையெடுத்துக் கும்பிட்டு மிகவும் அழுதார். நாங்கள் கூட தெம்பாக இருக்கிறோம். அவர் மிகவும் உடல் மெலிந்துதான் இருந்தார். விஜய் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்..’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us