/indian-express-tamil/media/media_files/2025/09/30/karur-issue-2025-09-30-17-07-55.jpg)
கரூர் விஜய் கூட்ட நெரிசல்: நடந்தது என்ன?: தமிழக அரசு தரப்பு வீடியோ ஆதாரத்துடன் விளக்கம்
கரூர் துயரம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, ஏ.டி.ஜி.பி. டேவிட்சன், சுகாதாரச் செயலாளர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமுதா ஐ.ஏ.எஸ். கூறியதாவது; 10,000 பேர் வருவார்கள் என த.வெ.க. தரப்பில் கடிதம் எழுதியிருந்தார்கள். முந்தைய கூட்டங்களை வைத்து 20,000 பேர் வருவார்கள் என கணித்து அதற்கேற்ப காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை, ஆனால் கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் போடப்பட்டது. கூட்டத்துக்கு 27 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.
போலீசார் இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது என விஜய்யே கூறியுள்ளார். கட்சித் தலைவர் வரும்போது வந்த கூட்டமும், ஏற்கெனவே இருந்த கூட்டமும் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. விஜய் பிரசார வாகனத்துக்கு வழிவிடும்போது நெரிசல் ஏற்பட்டது. பிரசார வாகனத்தை முன்பே நிறுத்தும்படி அறிவுறை கூறப்பட்டது. ஆனால் அதனை தவெகவினர் ஏற்கவில்லை. பிரசாரத்தில் விஜய் பேசியபோது மின்சாரம் நிறுத்தப்படவில்லை. ஜெனரேட்டர் ரூமுக்குள் அதிகம் பேர் புகுந்ததால் அங்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
விஜய் வருகை தாமதமானதால் பலர் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சோர்வடைது அங்கேயே அமர்ந்து ஓய்வெடுத்தனர். விஜய் வரும் போது, அவருடன் வந்த கூட்டமும், வண்டி வந்த போது, ஓரத்தில் உள்ள மக்கள் தள்ளிப் போக ஆரம்பித்தனர். அவரது முகத்தை பார்க்க வேண்டும் என மக்கள் முண்டியடித்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது.போலீசாரின் அறிவுரைகளை தவெகவினர் ஏற்கவில்லை.
கரூர் கூட்டத்திற்கு கட்சியினர் 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. சிலர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்து கூட்டத்திற்குள் முதலில் வந்தது த.வெ.க. ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ்தான். ஆட்சியரின் ஒப்புதலோடு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனையை தாமதப்படுத்தி இருந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு இருக்கும். கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தோம்.
ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வந்தது ஏன்?
கரூரில் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் 19 வாகனங்கள் உள்ளன. கூட்டம் நடந்த இடத்தில் 6 வாகனங்கள் இருந்தன. கூட்ட நெரிசல் காரணமாக மயங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கோரி முதலில் மாலை 7.14 மணிக்கு 108 ஆம்புலன்சுக்கு அழைப்பு வந்தது. 7.20க்கு முதல் முறையாக கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் சென்றது. அடுத்த அழைப்பு 7.15 மணிக்கு வந்த நிலையில் 7.23 க்கு ஆம்புலன்ஸ் சென்றது.
கட்சியினரின் ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்ததால், அது உடனே கொண்டு வரப்பட்டது. இரவு 7.45 முதல் 9.45 வரை அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 33 தனியார் ஆம்புலன்ஸ்கள் காவல்துறை கேட்டதன் பேரில் வந்தடைந்தன. சம்பவத்தை தொடர்ந்து அண்டை மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைப்பு. கூட்ட நெரிசலுக்கு பின்னே ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது.
காதாரத்துறை செயலர் செந்தில் கூறியதாவது: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 220 மருத்துவர்கள், 165 செவிலியர்கள் உள்ளனர். கூட்டநெரிசல் பற்றி அறிந்து சேலம், திருச்சி, திண்டுக்கல்லில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அதிக உயிரிழப்புகள் நடக்கும்போது மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இரவில் உடற்கூராய்வு செய்யலாம், அருகாமை மாவட்டங்களில் உள்ள தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இரவிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது என்று சுகாதாரத்துறை செயலர் விளக்கமளித்துள்ளார்.
ஏடிஜிபி டேவிட்சன் கூறியதாவது:கூட்டம் கூடிய பிறகு பாதியில் பிரசாரத்தை ரத்து செய்தால் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது. திருச்சி, திருவாரூர் என விஜய் பிரசாரம் செய்த இடங்களில் பலர் காயமடைந்தனர். விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பேரும், மதுரை மாநாட்டில் 16 பேரும் காயமடைந்தனர். சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.