/indian-express-tamil/media/media_files/2025/10/08/karur-vck-tvek-meeting-deaths-2025-10-08-13-41-32.jpg)
பனையூர் பக்கம் போலீஸ் போகாது... பின்னணி காரணங்கள் இவைதான்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரிக்க மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2 எஸ்.பி.கள், 1 ஏ.டி.எஸ்.பி., 2 டி.எஸ்.பி.க்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட இந்தக் குழு, தற்போது தீவிரமாக ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது.
சிறப்பு புலனாய்வுக் குழு திரட்டும் முக்கிய ஆதாரங்கள்:
- விஜய் தாமதமாக வந்தது, மக்களுக்குக் குடிநீர் கூட வழங்காதது, முறையாக ஏற்பாடுகளைச் செய்யாதது உள்ளிட்ட விஷயங்கள்.
- த.வெ.க.வின் 2-ம் கட்டத் தலைவர்கள் காவல் துறையின் அறிவுரைகள், திட்டங்கள் மற்றும் முன்கூட்டியே வாகனத்தை நிறுத்தச் சொன்ன உத்தரவு ஆகியவற்றை ஏற்க மறுத்தது.
- கரூர் நிகழ்வுக்குப் பின் வதந்திகள் மற்றும் கான்ஸ்பிரசி தியரிகளைப் பரப்பியது குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
- சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை, விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், செய்தியாளர்களைச் சந்தித்த அஸ்ரா கார்க், "விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது; இப்போது எதையும் பகிர முடியாது" என்று தெரிவித்தார்.
- அங்கே உள்ளே மக்களிடம் விசாரணை குழு முக்கிய வாக்குமூலங்களை பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடமும் அவர்களின் குடும்பங்களிடமும் ஆதாரங்களை பெற்றுள்ளனர்.
கரூர் துயரச் சம்பவத்தில் த.வெ.க.வையும், அதன் தலைவர் விஜய்யையும் கடுமையாகச் சாடிய நீதிமன்றம், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.
திருமாவளவன் கேள்வி: வி.சி.க. தலைவர் திருமாவளவன், "விஜய் மீது போலீஸ் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? அப்படியானால் விஜய்க்கும் தி.மு.க.வுக்கும் உறவா?" என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் துரைமுருகன் பதில்: இதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "யாரையும் தேவையில்லாமல் கைது செய்ய மாட்டோம். விஜய் மீது தவறு என விசாரணையில் தெரியவந்தால் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு: அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூட, "கூட்டணிக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்திற்குக் கட்டுப்பட்டு விஜய்யைக் கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் தனது அரசியல் அனுபவத்துடன் செயல்படுகிறார்" என்று அரசுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு நிதானத்துடன் செயல்படுவதற்கு பின் அரசியல் காரணங்கள்தான் உள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. விஜய் மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், த.வெ.க. தொண்டர்கள் ஆங்காங்கே முறையற்ற போராட்டங்களில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சர்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.