/indian-express-tamil/media/media_files/2025/11/01/karur-tvk-rally-stampede-cbi-3d-laser-scanner-41-deaths-karur-2025-11-01-17-40-28.jpg)
Karur
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டபோது, பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டாவது நாளாக 3D ஸ்கேனர் ஆய்வு
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 41 பேர் உயிரிழந்த இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்து, சனிக்கிழமையும் (இன்று) வேலுச்சாமிபுரத்தில் உள்ள சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.
அதிகாரிகள், 'பாரா ஃபோக்கஸ்' (Paro Focus) எனப்படும் 3டி லேசர் ஸ்கேனர் கருவியைப் பயன்படுத்தி, சம்பவம் நடந்த இடத்தை அங்குலம் அங்குலமாக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து அமைக்கப்பட்ட எஸ்ஐடி குழு, தனிநபர் குழு மற்றும் பொதுமக்கள் அளித்த வாக்குமூலங்கள், வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றினை மிகத் துல்லியமாக ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இந்த நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று, சிபிஐ அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவற்றின் பதிவுகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
வாக்குவாதத்திற்குக் காரணம் என்ன?
இன்று காலை 7 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் (கரூர்-ஈரோடு சாலை) பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஆய்வுப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கரூர்-ஈரோடு சாலையில் உள்ள முனியப்பன் கோயிலில் இருந்து கோதூர் பிரிவு சாலை வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சாலை அலுவலகங்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையாகும். தடுப்பு வேலிகளால் வேலைக்கு விரைவாகச் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடுப்பு வேலிகளை அகற்றக் கோரி சிபிஐ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுப்பாதையில் சமாதானம்
சம்பவ இடத்திலேயே வாக்குவாதம் முற்றியதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், பொதுமக்களைச் சமாதானப்படுத்தி, அவர்களை மாற்று வழியாக கோவை சாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us