/indian-express-tamil/media/media_files/2025/09/28/modi-2025-09-28-12-57-52.jpg)
கரூர் நகரில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 28) அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
கரூர் நகரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் பேசி முடித்து கூட்டம் கலைய ஆரம்பித்தபோது, ஏற்பட்ட மிகப் பெரிய நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய்யும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து (PMNRF) வழங்கப்படும் என்று தற்போது அறிவித்துள்ளார். இந்த துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.