/indian-express-tamil/media/media_files/2025/09/28/karur-sp-velumani-2025-09-28-08-00-44.jpg)
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கரூர் சம்பவம் மிகவும் வருத்தமான, துக்ககரமான ஒன்று என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை 39-ஐத் தொட்டிருக்கலாம் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "கரூர் சம்பவத்தில் 39 பேர் இறந்ததாகத் தகவல்கள் வருகின்றன. எங்களுக்கெல்லாம் நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இது மிகவும் வருத்தமான ஒன்று, மோசமான துக்கமான சம்பவம். கரூரில் நடந்த சம்பவம் பற்றி வார்த்தைகளே வரவில்லை" என்று மிகுந்த மன வருத்தத்தைத் தெரிவித்தார்.
பாதுகாப்புக் குறைபாடு குறித்து விமர்சனம்:
இந்தச் சம்பவத்திற்குத் தலைவர்களின் கட்சியினர் மற்றும் காவல்துறை சரியான முறையில் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என வேலுமணி வலியுறுத்தினார். "பிரச்சாரத்திற்கு வரக்கூடிய தலைவர்கள், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் காவல்துறையும் சரியான முறையில் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இது பற்றி முழுமையான தகவல்கள் தெரிகின்ற பொழுது விரிவாக அது பற்றி பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிச்சாமி) கருத்தை தெரிவிப்பார் என்று கூறியிருக்கிறார்" என்றார்.
39 பேர் பலி தகவல்: கரூர் சம்பவத்தால் வார்த்தைகளே வரவில்லை - எஸ்.பி. வேலுமணி வேதனை!#KarurStampede#spvelumanipic.twitter.com/TX2N7xqLTl
— Indian Express Tamil (@IeTamil) September 28, 2025
பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சை மற்றும் அரசு வேலை கோரிக்கை:
தற்போது கரூர் மாவட்டம் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது என்று குறிப்பிட்ட எஸ்.பி. வேலுமணி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும் அதிகமான அளவில் வழங்கி அரசு வேலை தர வேண்டும்" என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்:
"இது போன்ற சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல, எங்கும் இதுபோன்று நடக்கக்கூடாது. அதற்குப் போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதேசமயம், இந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.