புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் இடையே ஆன்மிக தீர்த்த பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம், இனிமேல் காசியின் புனித கங்கை தீர்த்த நீர் ராமேஸ்வரத்தில் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்படும்.
பண்டைய சாஸ்திர மரபின்படி, பக்தர்கள் முதலில் ராமநாதசுவாமி கோயிலை தரிசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பின், ராமேஸ்வர தீர்த்தத்தைக் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு காசியில் இருந்து கங்கை தீர்த்தத்தை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை இருந்தது.
இந்நிலையில், வயதானோர் மற்றும் உடல் நலக்குறைவால் யாத்திரை மேற்கொள்ள இயலாத பக்தர்களுக்காக, சிவகங்கை சமஸ்தானத்தின் முயற்சியில், இரு கோயில்கள் இடையே தீர்த்த பரிமாற்ற ஒப்பந்தம் நடைமுறையில் கொண்டு வரப்பட்டது.
இதற்காக கடந்த ஜூலை 28ம் தேதி காசியில், ராமேஸ்வர தீர்த்தத்தால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் கங்கை தீர்த்தம் காசி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழியாக, சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த அருணாசலம் மற்றும் கோவிலூர் சுவாமிகள் மும்தாக பெற்றுக்கொண்டு ராமேஸ்வரத்தில் கொண்டு வந்தனர்.
நேற்று ராமநாதசுவாமி கோயிலில் கங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், இரு கோயில்கள் சார்பில் தீர்த்த பரிமாற்ற ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக அருணாசலம் கூறுகையில், “ராமேஸ்வரம் கோயிலில் சிவகங்கை சமஸ்தானம் மூலம் ஏற்கனவே பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது காசி மற்றும் ராமேஸ்வரம் கோயில்கள் இடையே தீர்த்த பரிமாற்றம் நடக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு ஆன்மிக சேவை தொடரப்படுகிறது” எனத் தெரிவித்தார்.