இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை - திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்

Kashmir issue : காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக...

காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக, சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 12.08.2019 ரிபப்ளிக் டீவியில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துக்கொண்டேன். அந்த விவாதத்தின் பொழுது, திமுகவின் நிலைப்பாடு பற்றி விளக்கிய பின், காஷ்மீர் பற்றிய வரலாற்றை பேச முற்படுகையில், “Kashmir was never an integral part of India” என்று சொன்னவுடன், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மேற்கொண்டு பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

அர்னாப் கோஸ்வாமி விளக்கம் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு, விளக்கம் கொடுக்க வாய்ப்பளிக்காமல், நான் பேசியதை திரித்து, “Saravanan How can you say Kashmir is not a part of India” நான் “I said Was” என்று மறுத்து பதிலளித்தேன். இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அதனை காஷ்மீர அரசியல் நிர்ணய சபை ஒத்துக்கொண்ட பின்னர் 1956ஆம் ஆண்டு, காஷ்மீர அரசியல் சட்டத்தின் 3ஆவது சரத்தின் படி “3. State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India.”. காஷ்மீரத்து பிரச்சனையை வரலாறு அறியாமல் பேசமுடியாது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். சுமார் 16 நிமிடங்கள் அந்த விவாதத்தில் பங்கு பெற்றேன்.

சமூக வலைதளங்களில் பாஜகவினர், பாதியில் வெளியேறிய திமுக வக்கீல் சரவணன் என போட்டோ ஷாப் செய்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான் ஏதோ காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என சொன்னது போல பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. முழு வீடியோவையும் வெளியிடாமல், வெட்டியும், ஒட்டியும் வழக்கம்போல் இறங்கியுள்ளனர் பொய் புரட்டு பா.ஜ.க.வினர். அந்த விவாதத்தில் “Kashmir was never an integral part of India” என்று சொன்ன அடுத்த நொடி அர்னாப் கோஸ்வாமி, என்னை பேசவிடாமல், மற்றவர்களோடு சேர்ந்து கூச்சல் இடுகிறார். பேசியதை திரித்து “How can you say Kashmir is not an integral part of India” என்று “was” என்று சொன்னதை “is” என திரிக்கிறார். விளக்கம் சொல்ல விடாமல் மற்ற பாஜகவின் பங்கேற்பாளர்கள், கூச்சல் போட்டு பேச விடாமல், தொடர்ந்து கடும் வார்தைகளால் தாக்கினர்.

விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் அதே கேள்வியை திரித்து கேட்டதால் “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அந்நிகழ்ச்சியில் பதிவு செய்யவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன் என்று சரவணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close