எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள்ள போக முடியாது, அர்ச்சகர்கள் மட்டுமே போக முடியும் என்று கூறிய நடிகை கஸ்தூரி, தி.மு.க-வின் ஆட்சியை அகற்றிப் புதிய காற்று தமிழகத்தில் வீச வேண்டுமானால் ஒருமித்த கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க மாநில அலுவலகமான கமலாலயத்தில் நடிகை கஸ்தூரி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, “தமிழகத்தில் ஒரு புதிய காற்று வீசவேண்டும் என்றால் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் என்னை பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல முன்னேற்பாடாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதையே எல்லாரும் நினைக்க வேண்டும் என அவசியமில்லை. ஆனால், இதை நம்புகிறேன். கடந்த ஒரு மாதமாக எனது வாழ்க்கை ரொம்ப மாறிவிட்டது.” என்று கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இசைஞானி இளையராஜாவை அர்த்த மண்டபத்தில் அனுமதிக்கவில்லை என்ற சர்ச்சை குறித்து பேசிய நடிகை கஸ்தூரி, “இளையராஜா என்பவர் ஒரு இசை கடவுள்; கடவுள் கோயிலுக்கு போக வேண்டும் என்ற அவசியமே இல்லை; இளையராஜாவை கோயிலுக்கு உள்ளே விடவில்லை என்ற என்கிற மாதிரி ஒரு சர்ச்சை வந்திருக்கிறது, இந்த பிரசாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து எத்தனை நாளுக்கு தான் ஏமாற்றுவார்கள். கருவறைக்குள்ள எந்த சாதியுமே போக முடியாது, அது இளையராஜாவாக இருந்தாலும் சரி, கஸ்தூரியாக இருந்தாலும் சரி கருவறைக்குள்ள போக முடியாது.” என்று நடிகை கஸ்தூரி கூறினார்.
மேலும், “எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள்ள போக முடியாது. பிராமணராக இருந்தாலும் கருவறைக்குள்ள போக முடியாது. கருவறைக்குள்ள அர்ச்சகர்கள் மட்டும்தான் போக முடியும். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், எந்த சாதியாக இருந்தாலும் அர்ச்சகராக இருந்தால் போக முடியும் இவ்வளவுதான் விஷயம். இதை திருச்சி பேசுற இந்த வன்ம போக்க கண்டித்துதான் நவம்பர் 3-ம் தேதி நான் பேசினேன். இதையே தான் இப்போதும் பேசுகிறேன்” என்று நடிகை கஸ்தூரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“