நடிகை கஸ்தூரி, திருநங்கைகள் குறித்து போட்ட கமெண்ட் விவகாரம் ஆகியிருக்கிறது. இதற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட கஸ்தூரி, ஃபேஸ்புக் வீடியோவிலும் கதறியிருக்கிறார்.
நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்பற்றுபவர்களுடன் ஜாலியாக கலாய்ப்பது வழக்கம்தான். நேரம் காலம் பார்க்காமல் அதிகாலை 2 மணி, 3 மணி வரை அரட்டை அடிப்பதும் நடக்கும்!
கஸ்தூரியை ‘கன்னாபின்னா’வென ரசிகர்கள் அதில் பேசினாலும்கூட ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டு ட்விட்டரில் பயணிப்பதை தொடர்ந்து வருகிறார் அவர்! அதேசமயம் அவ்வப்போது அரசியல் ரீதியாக சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். திடீரென யாரோ ஒரு அமைச்சருடன் அல்லது அரசியல் விஐபி.யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவரே வதந்திகளுக்கும் வழி வகுப்பார்.
இந்தச் சூழலில்தான் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை, திருநங்கைகளுடன் ஒப்பிடும் வகையில் கஸ்தூரி வெளியிட்ட ட்வீட் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருநங்கைகளை குறிப்பிடும் விதமாக கொச்சையான வார்த்தையை பயன்படுத்தியதுடன், திருநங்கை வேடமணிந்த இருவரது புகைப்படங்களையும் அதில் பதிவிட்டார்.
திருநங்கைகள் தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை ஆழ்வார்பேட்டையில் கஸ்தூரி வீடு முன்பு சுமார் 50 திருநங்கைகள் நேற்று (ஜூ 16) போராட்டம் நடத்தினர். கஸ்தூரி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
திருநங்கைகளின் எதிர்ப்புக்கு பணிந்த கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். ஏற்கனவே அவர் வெளியிட்ட சர்ச்சை பதிவையும் நீக்கினார். ஆனாலும் திருநங்கைகள் சமரசம் ஆகவில்லை.
To Read நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்: திருநங்கைகள் பற்றி அவதூறு பதிவுக்காக! Click Here
இந்தச் சூழலில் இன்று தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘எவ்விதம் உள்நோக்கமும் இல்லாமல் வேடிக்கையாக நினைத்து நான் வெளியிட்ட பதிவு நான் மிக மதிக்கும் எனது சகோதர, சகோதரிகள் பலரது மனதை புண்படுத்தியிருக்கிறது. இதற்காக நேற்றே மன்னிப்பு கேட்டேன். அந்தப் பதிவையும் நீக்கிவிட்டேன்.
அதன்பிறகும் நான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து சிலர் பரப்புகிறார்கள். இது அந்த சகோதர சகோதரிகளின் மனதை புண்படுத்துவதுடன், என்னையும் காயப்படுத்துகிறது. தயவு செய்து இதை செய்யாதீர்கள்.
நானும் மனுஷிதான்! தவறு செய்யாமல் யாரும் இருந்துவிட முடியாது. இன்னும் நான் தவறு செய்வேன். அப்போ வச்சு செய்யுங்க. இப்போ இதை பிரச்னையாக்காமல் விட்டுவிடுங்கள்’ என கதறலாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் கஸ்தூரி.
திருநங்கைகள் நீதிமன்றம் செல்வதற்குள், அவர்களை நேரில் சந்தித்து சமரசம் செய்யவும் தயாராகி வருகிறார் கஸ்தூரி!