நடிகை கஸ்தூரி, திருநங்கைகள் குறித்து கமெண்ட் செய்த பதிவுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவருக்கு எதிராக திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர்.
நடிகை கஸ்தூரி, அவ்வப்போது கருத்துகள் மூலமாகவே சர்ச்சைகளை கிளப்புவது வாடிக்கைதான். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, ‘கோர்ட்ல ஸ்பிளிட் வெர்டிக்டாமே? அப்போ பதினெட்டை ரெண்டா பிரிச்சா...’ என ட்விட்டரில் கமெண்ட் போட்டு திருநங்கை வேடமணிந்த இருவரின் படத்தை பதிவு செய்திருந்தார்.
திருநங்கைகள் தரப்பிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி மதுரையில் திருநங்கைகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் கஸ்தூரி இல்லம் எதிரே சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து திருநங்கைகளை இழிவு செய்த தனது பதிவை நீக்கினார் கஸ்தூரி.
மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியும் பதிவிட்டார். அதில் அவர், ‘Stand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற comedyதான், அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுக்கள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி சன்னி லியோன் பற்றி நான் fwd செய்த கமெண்டும் இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.
இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்.’ என கூறியிருக்கிறார் கஸ்தூரி.
கஸ்தூரியின் ட்வீட் தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பலரும் எழுதி வருகிறார்கள்.